பணியிடங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பாதுகாப்புத் துறை (டிஓடி) ஜனவரி 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை நாடு முழுவதும் மொத்தம் 655 தூய்மை இயக்கங்களை நடத்தியுள்ளது. இந்த இயக்கங்கள் பணியிட மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழலை மேம்படுத்துவதற்கு கணிசமாக பங்களித்துள்ளன, அதே நேரத்தில் வருவாயையும் ஈட்டுகின்றன.
இந்த தூய்மைப்பணியின் மூலம் தேவையற்றப் பொருட்கள் அகற்றப்பட்டு பாதுகாப்புத் துறையில் 53,698 சதுர அடி இடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. கழிவுகள் மற்றும் தேவையற்றப் பொருட்கள் கொள்கையின்படி, குப்பைகளை அகற்றுவதன் மூலம் ரூ.76.92 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த இயக்கங்களின் கீழ் பாதுகாப்புத் தொடர்பான அலுவலகங்களில், தேவையற்ற கோப்புகளை வெளியேற்றுதல், குப்பைப் பொருட்களை அகற்றுதல், வெளிப்புற மற்றும் உட்புற தூய்மைப் பணிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியது போல, மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட தூய்மை இயக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் நாடு தழுவிய இயக்கமாக பரிணமித்துள்ளது. இது புவியியல் எல்லைகளைக் கடந்து, நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பரவியுள்ளது.
திவாஹர்