காந்திநகரில் இன்று (செப்டம்பர் 13, 2023) ‘தேசிய இ-விதான் செயலி’யைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குஜராத் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
1960 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து, குஜராத் சட்டமன்றம் எப்போதும் சமூகத்தின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது என்று விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் கூறினார். அவ்வப்போது பல பாராட்டத்தக்க நடவடிக்கைகளை இம்மன்றம் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இன்று இ-பேரவையைத் தொடங்கி வைப்பது இந்த அவையை டிஜிட்டல் அவையாக மாற்றும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று அவர் மேலும் கூறினார். தேசிய இ-விதான் செயலி மூலம் இந்த அவையின் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் பிற சட்டமன்றங்களின் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் முடியும் என்று அவர் தெரிவித்தார். “ஒரே நாடு ஒரே பயன்பாடு” என்ற இலக்கால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, குஜராத் சட்டமன்றத்தின் செயல்பாட்டில் அதிக வேகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் என்றும், அவையின் முழு செயல்முறையும் காகிதமற்றதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பல அளவுகோல்களில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விளங்குகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது ஒரு முன்னணி உற்பத்தி மையமாகவும், மிகப்பெரிய பால் உற்பத்தி மாநிலமாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப் சூழல், மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
எந்தவொரு மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திலும் மனிதவளம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மனித வள மேம்பாட்டிற்கு நல்ல சுகாதார அமைப்பு, தரமான கல்வி, மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளைப் பொதுமக்களுக்கு வழங்குவது முக்கியம் என்று அவர் கூறினார். இந்த விஷயத்தில் குஜராத் அரசு முழு கவனம் செலுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் முயற்சியால் பெண் கல்வி, ஆசிரியர்-மாணவர் விகிதம், சேர்க்கை விகிதம், தக்கவைப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மகப்பேறுகால இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் மூன்றடுக்கு சுகாதார அமைப்பு மூலம் கிராமப்புறங்களில் வழங்கப்படும் சிறந்த மருத்துவ சேவைகளை அவர் பாராட்டினார். கடந்த இரண்டு தசாப்தங்களில் குஜராத்தில் மின்சார சீர்திருத்தம், நீர் சேகரிப்பு மற்றும் நீர் விநியோகத்தில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கப் பணிகளை அவர் பாராட்டினார். விலங்குகள் நலனுக்கான மாநில அரசின் முன்முயற்சிகளைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.
எஸ்.சதிஸ் சர்மா