இந்திய ரயில்வேயின் (2018 பிரிவு) 255 பயிற்சி அதிகாரிகள் குழு இன்று (செப்டம்பர் 14, 2023) குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் சந்தித்தது.
அப்போது பேசிய குடியரசு தலைவர், இந்திய ரயில்வே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமூக-கலாச்சார பன்முகத்தன்மையின் முதுகெலும்பு என்று கூறினார் . ரயில்வே சுற்றுச்சூழல் அமைப்பின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதும், இந்திய ரயில்வேயை உலகின் சிறந்த தரமான சேவைகளை வழங்குபவராக மாற்ற முயற்சிப்பதும் தங்களைப் போன்ற இளம் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் இன்று அனைத்து துறைகளிலும் உந்து சக்தியாக உள்ளது என்று குடியரசு தலைவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் மற்றும் ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான டன் சரக்குகளை கொண்டு செல்லும் இந்திய ரயில்வேக்கு, தொழில்நுட்பத்தை சிறந்த அளவில் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். மக்கள் நட்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து அமைப்புக்கான புதிய பயன்பாடுகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய பாதையை வகுப்பதில் பங்களிக்குமாறு இளம் அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
ரயில்களில் பயணிப்பவர்கள் தமது பயணங்களின் நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பயணிகளை தங்கள் விருந்தினர்களாக கருதி, அவர்கள் போற்றக்கூடிய சிறந்த சேவை மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். அனைத்து வழிகளிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
எஸ்.சதிஸ் சர்மா