உடல் உறுப்புகளை தானம் செய்வதை விட பெரிய சேவை வேறு எதுவும் இருக்க முடியாது: டாக்டர் மன்சுக் மாண்டவியா .

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் திரு. மன்சுக் மாண்டவியா இன்று ஆக்ராவில் உள்ள ஜி.ஐ.சி மைதானத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல் மற்றும் உத்தரபிரதேசத்தின் துணை முதல்வரும் மருத்துவ கல்வி அமைச்சருமான திரு பிரஜேஷ் பதக் ஆகியோர் முன்னிலையில் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான உறுதிமொழியை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு. மாண்டவியா, மற்றொரு உயிரைக் காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்வதை விட மனித குலத்திற்கு செய்யும் சேவை வேறு எதுவும் இருக்க முடியாது என்றார். “உயிருடன் இருக்கும்போது ரத்த தானம் செய்யுங்கள், இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்” என்றும் அறைகூவல் விடுத்தார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான மருந்துகள் மற்றும் பரிசோதனையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய அமைச்சர், “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று கூறினார். “அவர்களின் வழக்கமான பரிசோதனைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்”, என்று அவர் மேலும் கூறினார்.

2024-ம் ஆண்டு இறுதிக்குள், நாட்டின் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உறுப்புகளை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதார பணியாளர்களை அதிகரிக்கவும், நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் இந்தியா பல முக்கிய முயற்சிகளை எடுத்துள்ளது என்றும் டாக்டர் மாண்டவியா கூறினார்.

மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply