நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோதியின் உரை.

மக்களவையில் இன்று (18.09.2023) நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது.

இதில் அவையில் உரையாற்றிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். பழைய நாடாளுமன்ற கட்டடம் குறித்துப் பேசிய பிரதமர், இந்த கட்டடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக செயல்பட்டதாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நாடாளுமன்றமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கட்டடத்தை கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பணம் ஆகியவை தான் இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். 75 ஆண்டுகால பயணத்தில், அனைவரது மரபுகள் மற்றும் பாரம்பரியங்களில் மிகச் சிறந்தவற்றை இந்த அவை உருவாக்கியுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். நாம் புதிய கட்டடத்திற்கு மாறினாலும் இந்தப் பழைய கட்டடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் இது இந்திய ஜனநாயகப் பயணத்தின் பொன்னான அத்தியாயம் என்றும் அவர் கூறினார். 

அமிர்த காலத்தின் புதிய முதல் ஒளியில் ஏற்படுத்தப்படும் புதிய நம்பிக்கை, சாதனை மற்றும் திறன்கள் குறித்தும், இந்தியாவின் சாதனைகளை உலகம் எவ்வாறு விவாதிக்கிறது என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். இது நமது 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றின் கூட்டு முயற்சியின் விளைவாகும் என்று அவர் கூறினார்.

சந்திரயான் 3-ன் வெற்றியைக் குறிப்பிட்ட திரு. நரேந்திர மோடி, இது இந்தியாவின் திறன்களின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது என்றார். இது நவீனத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் 140 கோடி இந்தியர்களின் வலிமையுடன் இணைந்தது என்று அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானிகளின் சாதனைக்காக அவை மற்றும் தேசத்தின் பாராட்டுகளை பிரதமர் தெரிவித்தார்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply