சந்திரயான் வெற்றியைக் கொண்டாடும் அதே நேரத்தில், பல்வேறு துறை மேம்பாட்டுத் திட்டங்களில் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளையும் இந்தியா பயன்படுத்துகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், விண்வெளி மற்றும் அணுசக்தி இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். உயிரி மருத்துவ அறிவியலில் சந்திரயான் -3 வெற்றியைப் பின்பற்றுதல் என்ற சிறப்பு அமர்வில் அவர் இன்று உரையாற்றினார்.
விண்வெளித் தொழில்நுட்பம் இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் நுழைந்துள்ளது என்று அவர் கூறினார்.
“கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில்தான் விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் அதன் அறிவியல் பயன்பாடுகளை துறைசார் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் உலகிற்குக் காண்பித்துள்ளோம். இதிலிருந்து வெளிப்படும் மிகப்பெரிய, இணையான ஆக்கப்பூர்வ தகவல்களை நம் சிறுவர், சிறுமியருக்குப் புரிய வைக்க வேண்டும்” என்று புதுதில்லியில் உள்ள சர்வதேச கணையவியல் சங்கத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் கூறினார்.
நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலாக சந்திரயான் -3 தரையிறங்கியது, இந்தியாவின் குறைந்த செலவிலான தொழில்நுட்ப திறனையும், திறமையையும் உலகின் முன் நிரூபித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். சந்திரயான் -1 திட்டத்தின் மூலம் கந்தகம், கோபால்ட், ஹைட்ரஜன், நீர்மக் கூறுகள் போன்ற கனிமங்களின் சான்றுகள் உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்தால் அறியப்பட்டன.
“நாம் இப்போது மற்றவர்களின் தலைமையை ஏற்பதற்கு பதிலாக மற்ற நாடுகளுக்குத் தலைமை தாங்கும் நிலையில் இந்தியா இருக்கிறது. விண்வெளித் துறையைத் தனியாருக்கு திறக்கப் பிரதமர் திரு நரேந்திர மோடி தைரியமான முடிவை எடுத்த பிறகுதான் இத்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய பாய்ச்சல் சாத்தியமானது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.
எம்.பிரபாகரன்