சந்திரயான் -3 இந்தியாவின் சமூக, கலாச்சார மற்றும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாகும்: மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சந்திரயான் -3 இன் வெற்றி, இந்தியாவின் சமூக, கலாச்சார மற்றும் அறிவியல்  வளர்ச்சியின் விளைவாகும். செப்டம்பர் 21  அன்று மக்களவையில் சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி மற்றும் விண்வெளித் துறையில் நாட்டின் பிற சாதனைகள் குறித்த விவாதத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார்.

சந்திரயான் -3 இன் வெற்றி நாட்டில் வலுவான அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பு உருவெடுக்கிறது என்பதற்கான சான்றாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் விவரித்தார். “சந்திரயான் -3 நமது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் கல்வி மேம்பட்டு வருவதைக் காட்டுகிறது, மேலும் தொழிற்சாலைகள் தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்து வழங்குகின்றன. இதற்கான முயற்சிகளும் முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்டன. எனவே, நாட்டிற்குள் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு பங்களித்த ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்” என்று அவர் கூறினார்.

சந்திரயான் -3 முழு நாட்டிற்கும் ஒரு பெரிய சாதனை என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், பல வளர்ந்த நாடுகள், அதிக வளங்கள் நிறைந்ததாக இருந்து கொண்டு, சந்திரனை அடைய முயற்சிக்கின்றன, அதே நேரத்தில் இந்தியா வரையறுக்கப்பட்ட வளங்களுடன் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக மாறியுள்ளது என்று கூறினார். இந்த வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு தான் காரணம் என்று அவர் பாராட்டினார். அவர்களின் அயராத முயற்சியால் இன்று அறிவியல் துறையில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார் அவர்.

இந்தியா இதுவரை செலுத்திய 424  வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 389  செயற்கைக்கோள்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடந்த ஒன்பது ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம், இந்தியாவின் விண்வெளித் துறை உலகில் ஒரு முக்கிய இடத்தை விரைவாகப் பெற்று வருகிறது என்று அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply