கூட்டாண்மை முறையில் 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்கும் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் சைனிக் பள்ளி சங்கம் செப்டம்பர் 27, 2023 முதல் நவம்பர் 25, 2023 வரை தகுதிவாய்ந்த, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களைப் பதிவு செய்வதற்கான https://sainikschool.ncog.gov.in/ போர்ட்டலை மீண்டும் திறக்கும். ஆர்வமுள்ள பள்ளிகள் / அறக்கட்டளைகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை போர்ட்டலில் கிடைக்கும் புதிய சைனிக் பள்ளிகளுக்கான தேவைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சுற்று-1 மற்றும் சுற்று-2-ன் போது ஏற்கனவே பதிவு செய்து விண்ணப்பித்த பள்ளிகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / அறக்கட்டளைகள் / சங்கங்கள் போன்றவை புதிதாக விண்ணப்பிக்கவோ அல்லது மீண்டும் பதிவு கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. இருப்பினும், முன்னர் பதிவு செய்த விண்ணப்பதாரர் புதிய உள்ளீடுகள் ஏதேனும் இருந்தால் தங்கள் தரவுகளை போர்ட்டலில் புதுப்பிக்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏதேனும் விளக்கம் / உதவிக்கு, ஆர்வமுள்ள பள்ளிகள் https://sainikschool.ncog.gov.in/ என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
புதிய சைனிக் பள்ளிகளை நிறுவும் அரசின் தொலைநோக்கு என்பது தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவது மட்டுமின்றி, ஆயுதப்படைகளில் சேருவது உட்பட சிறந்த தொழில் வாய்ப்புகளையும் வழங்குவதாகும்; மாநில அரசுகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / தனியார் துறை ஆகியவை தேசத்தைக் கட்டமைப்பதில் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்படுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இதற்காக சைனிக் பள்ளிகள் சங்கம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 33 சைனிக் பள்ளிகளைத் தவிர 42 தனியார் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / மாநில அரசுப் பள்ளிகளை புதிய சைனிக் பள்ளிகளாக அங்கீகரித்துள்ளது.
இந்தப் புதிய பள்ளிகள், அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைக்கப்படுவதைத் தவிர, சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும். புதிய சைனிக் பள்ளிகளுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கூட்டாண்மை முறையில் பின்பற்றும். கூடுதலாக, அவர்களின் வழக்கமான இணைக்கப்பட்ட வாரிய பாடத்திட்டத்துடன், சைனிக் பள்ளி முறை மாணவர்களுக்கு கூடுதல் பாடத்திட்டத்தின் கல்வியையும் அவர்கள் வழங்குவார்கள்.
திவாஹர்