2070ம் ஆண்டுக்குள் நாட்டை கார்பன் உமிழ்வற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைய கட்டுமானத் துறையில் பசுமை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறினார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் தலைமையில் நாட்டை தூய்மையாகவும், குப்பை இல்லாததாகவும் மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். தற்போது நடைபெற்று வரும் தூய்மையே சேவை திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் தூய்மை இயக்கம் , வழியோர வசதிகள், தாபாக்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 13,000 இடங்களில் திட்டமிடப்பட்டு, கிட்டத்தட்ட 7000 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் அன்றாடம் உருவாகும் திடக்கழிவுகளை அகற்றுவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது என்று திரு கட்கரி கூறினார். சுமார் 10,000 ஹெக்டேர் நிலம் குப்பைக் கிடங்குகளாக உள்ளது என்று அவர் கூறினார். நகர்ப்புற திடக்கழிவுகளை நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துவதற்கான தீர்வுகள் குறித்து அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். தொழில்நுட்பம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மூலம் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குவது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.
திவாஹர்