தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பணி வழங்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்துவரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி வழங்கிட வேண்டும்.

2013-ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் அரசு பணி வழங்ககோரி இதுவரை பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

தற்பொழுது 2013-ஆம் ஆண்டு முதல் இதுரை தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற 149 -வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நலச்சங்கம் நடத்திய போராட்டத்தில் திமுக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் வாக்களித்து விட்டு இன்று அவர்களின் வாக்குகளை பெற்று வெற்றியடைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிராகரிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு பணியினை வழங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply