இந்தியா- பிரேசில் வர்த்தக க் கண்காணிப்பு அமைப்பின் 6-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வர்த்தகத்துறை செயலாளர் பிரேசில் சென்றார் .

இந்தியா-பிரேசில் வர்த்தகக் கண்காணிப்பு அமைப்பின் 6-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக  2023 அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4 வரை, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் பிரேசிலில் பயணம் மேற்கொண்டார்.  அவருடன் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் 20 வர்த்தகத் தலைவர்கள் குழுவும் சென்றது. இருதரப்பு வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் அது இரட்டிப்பாகி 16 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டிய நிலையில், இந்தப் பயணம் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே விரைவாக வளர்ந்து வரும் இந்த வர்த்தக உறவை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது.

பிரேசில் அதிகாரிகளுடனான உரையாடலின் போது, இந்தியாவின் ஜி 20 தலைமையின் போது அளித்த  ஆதரவை வர்த்தகத்துறை செயலாளர் பாராட்டினார். மேலும் ஜி 20 தலைமைத்துவத்தை பிரேசில் பொறுப்பேற்கும் போது அதை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

பிரேசிலின் தொழில்துறை கூட்டமைப்பு, சாவ் பாலோ வர்த்தக சங்கம், சாவ் பாலோ தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் ரியோ டி ஜெனிரோவில் உள்ள தொழில்துறைகள் உள்ளிட்ட முக்கிய பிரேசில் அமைப்புகளுடன் இந்திய தூதுக்குழு விவாதங்களையும், வணிக சந்திப்புகளையும் நடத்தி புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்தது.

அக்டோபர் 2, 2023 அன்று, இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக உறவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு வர்த்தக வசதி நடவடிக்கைகளில் தூதுக்குழு பங்கேற்றது. சாவோ பாலோவின் வணிக சங்கத்துடனான சந்திப்பு சாத்தியமான வர்த்தக ஒத்துழைப்புகள் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. பிரேசிலில் செயல்படும் இந்திய நிறுவனங்களுடன் கலந்துரையாடல் அமர்வு, வணிக சமூகத்திற்குள் நெருக்கமான உறவுகளை வளர்ப்பது, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் காண்பது ஆகியவற்றுடன் இந்த நாள் நிறைவடைந்தது.

இந்தியாவில் முதலீடு செய்துள்ள பிரேசில் நிறுவனங்களுடன் அக்டோபர் 3 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஆதரிப்பதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரேசிலில் உள்ள முன்னணி கண்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திரு பர்த்வால் கலந்துரையாடினார். பிராந்தியத்தின் முக்கிய தொழில் அமைப்பான சாவோ பாவ்லோ தொழில்துறை கூட்டமைப்புடன் அவர் பேச்சு நடத்தினார்.

அக்டோபர் 4, 2023 அன்று, பிரேசில் கூட்டாட்சி குடியரசின் வெளிநாட்டு வர்த்தக செயலாளர் திருமதி டாடியானா லாசெர்டா பிரஸெரெஸுடன், இந்தியா-பிரேசில் வர்த்தக கண்காணிப்பு அமைப்பின் 6-வது கூட்டத்திற்கு வர்த்தக செயலாளர் கூட்டாகத் தலைமை தாங்கினார். இருதரப்பு வர்த்தகம் தொடர்பான விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகக் கூட்டாண்மையை மேம்படுத்த பிரேசிலின் வளர்ச்சி, தொழில், வர்த்தகம் மற்றும் சேவைகள் துறை துணை அமைச்சர் திரு. மார்சியோ எலியாஸ் ரோசாவுடன் திரு பர்த்வால் விரிவாகப் பேச்சு  நடத்தினார்.

தொழில்நுட்பப் பரிமாற்றம், முதலீடுகள் உள்ளிட்ட இந்தியாவின் ஆற்றல்மிக்க பொருளாதார வளர்ச்சியால் வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து பிரேசிலின் முன்னணி தொழில்கள் மற்றும் தேசிய தொழில்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களான கலந்துரையாடலுடன் இந்தப் பயணம் நிறைவடைந்தது.

எம்.பிரபாகரன்

Leave a Reply