கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள், 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம்.
கடந்த மாதம் செப்டம்பர் 15 ஆம் தேதி தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மைன் பாஸ்டினுக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர் ரவிபுத்தன் துறையைச் சேர்ந்த 28 மீனவர்கள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 இருவர் என 32 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த 27 ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி பிரிட்டன் கடற்படையினர் 32 மீனவர்களையும் சிறைபிடித்து, இந்தியப் பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான டீகோ கார்சியா தீவுக்குக் கொண்டு சென்று, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துகொண்டனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல், அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. கவலை அடைந்த அவர்கள் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது இரண்டு படகுகளையும் மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா