காவிரி ஆற்றில் போதிய தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததாலும், தமிழகத்தில் நீர்பிடிப்பு பகுதிகளின் உரிய நேரத்தில் சரிவர மழை பெய்யாததாலும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் அவர்கள், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500 இழப்பீடு அறிவித்துள்ளார். இந்த இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் ஏக்கருக்கு மட்டும் டெல்டா விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களிலும், விவசாய வங்கிகளிலும், தனியார் அடகு கடைகளிலும் தங்களுடைய நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஏக்கர் ஒன்றிக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிரப்பட்டுள்ளது.
தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ள இழப்பீடு என்பது போதுமானது அல்ல.”யானைப் பசிக்கு சோலப் பொறி” போட்டது போல் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், திருச்சி, ஆகிய ஒவ்வொரு மாட்டத்திற்கும் குறைந்தது 30 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேர் என்பது 2.5 ஏக்கர், அறிவிக்கப்பட்ட தொகை ஒரு ஹெக்டேருக்கு 13,500 என்றால் ஒரு ஏக்கருக்கு 5,500 ரூபாய் தான் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக இருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்கிறார்கள்.
தமிழக அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்