உயர் தொழில்நுட்ப மருத்துவ சாதனங்களுக்கான உலகளாவிய போட்டிக்கு மத்தியில், இந்தியா உலகின் முதல் ஐந்து மருத்துவ சுகாதார சாதனங்கள் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மிகக் குறைந்த செலவில் இந்தியாவில் மருத்துவ சுகாதார சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.
உயிர் காக்கும் மருத்துவ சாதனங்களை இந்தியா தயாரித்து வருகிறது, என்றும் அவர் கூறினார்.
புதுதில்லியில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த 8 வது காஹோடெக், வருடாந்திர சர்வதேச சுகாதார தொழில்நுட்ப மாநாட்டில் அமைச்சர் தொடக்க உரையாற்றினார்.
மருத்துவ சாதனங்கள் நாட்டின் புதிய வளர்ந்து வரும் தொழில் துறைகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவை அதன் உற்பத்தி மையமாக மாற்ற சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
“மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களின் உலகளாவிய மையமாக இந்தியா மாறும், சந்தை அளவு தற்போதைய 11 பில்லியன் டாலரிலிருந்து (சுமார் ₹ 90,000 கோடி) 2050 க்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
1.5 சதவீதமாக இருக்கும் இந்தியாவின் சந்தைப் பங்கை அடுத்த 25 ஆண்டுகளில் 10-12 சதவீதமாக உயர்த்துவோம் என்று நம்புகிறோம். மருத்துவ சாதனங்கள் உற்பத்தி துறை மோடி அரசால் முன்னுரிமைத் துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சூழலை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
“தேசிய மருத்துவ சாதனக் கொள்கை 2023 மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான ஏற்றுமதி-ஊக்குவிப்பு கவுன்சில் அமைப்பது ஆகியவை இந்தியாவை மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா