தேசிய சுகாதார ஆணையம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் அடிப்படையில் ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவையைப் பயன்படுத்தி புறநோயாளிகள் பிரிவு பதிவுகளுக்கு 1 கோடிக்கும் அதிகமான சீட்டுகளை உருவாக்கும் முக்கிய மைல்கல்லைக் கடந்தது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் 2022 அக்டோபரில் தொடங்கப்பட்ட காகிதமில்லா சேவை அடிப்படையில் புறநோயாளிகள் துறை (ஓபிடி) பதிவு கவுண்டரில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை நோயாளிகள் ஸ்கேன் செய்ய அனுமதிக்கிறது மற்றும் உடனடி பதிவுக்காக அவர்களின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் சுயவிவரத்தைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது. இந்த சேவை தற்போது நாட்டின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 419 மாவட்டங்களில் 2,600 க்கும் அதிகமான சுகாதார மையங்களில் செயல்பாட்டில் உள்ளது.
நோயாளிப் பதிவு கவுண்டர்களில் உள்ள வரிசைகளை நிர்வகிக்கவும், நோயாளிகளுக்கு சிறந்த சேவை அனுபவத்தை வழங்கவும் ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை பொது சுகாதார வசதிகளில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தில்லி, போபால் மற்றும் ராய்ப்பூர் நகரங்களில் உள்ள எய்ம்ஸில் அதிகபட்ச பயன்பாட்டை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் இணையதளத்தில் (https://dashboard.abdm.gov.in/abdm/) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதல் பதினைந்து மருத்துவமனைகளில் ஒன்பது மருத்துவமனைகள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை. ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கின் அடிப்படையிலான ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த புறநோயாளிகள் சீட்டுகளின் எண்ணிக்கையில் கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் தில்லி ஆகியவை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அருகில் உள்ளன. தில்லி எய்ம்ஸ், பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனை மற்றும் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவைக்கான சிறந்த சுகாதார வசதிகளாக உருவெடுத்துள்ளன.
இதுபோன்ற டிஜிட்டல் சேவைகளின் முக்கியத்துவம் குறித்து பேசிய தேசிய சுகாதாரக் கணக்குத் தலைமை நிர்வாக அதிகாரி – “சுகாதார வழங்கலில் எளிமையையும், செயல்திறனையும் அளிப்பதை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். புறநோயாளிகள் பிரிவு மையங்களில் ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவை என்பது ஒரு எளிய தொழில்நுட்பத் தலையீடு ஆகும். இது சுமார் 1 லட்சம் நோயாளிகளுக்குத் தினசரி அடிப்படையில் மருத்துவமனை வரிசையில் செலவிடும் நேரத்தை சேமிக்க உதவுவதாகக் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்