தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் வாகனங்களுக்கான வரி உயர்வை அறிவித்துள்ளார். இந்த வரி உயர்வால் ஏழை, எளிய மக்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்துவதற்காக வரியை உயர்த்துவது சரியானதாக இருந்தாலும் கூட, அவற்றில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். சரக்கு வாகனம், வாடகை வாகனம், பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி உயர்த்துவதால் அந்த உயர்வு மக்களின் தலையில் அதன் சுமை மேலும் சேரும்.
சரக்கு மற்றும் வாடகை வாகனங்களுக்கு வரியை உயர்த்தினால் அந்த வரி உயர்வை பலமடங்காக வாகனத்தின், வாடகையிலும், வியாபாரிகள் பொருள்களின் மீதும் விலையை உயர்த்துவார்கள். ஏற்கனவே மின்கட்டணம், பால் விலையுர்வு, சொத்துவரி உயர்வு என்று பல்வேறு வகையில் சிரமபட்டு வரும் நிலையில் தற்பொழுது இந்த வாகனம் வரி உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு வரி உயர்த்துவது சரியான முடிவல்ல. மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் செல்லும் கல்வி நிறுவன பேருந்துகளுக்கும் 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு 45 ரூபாய் உயர்த்தியுள்ளது மாணவர்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதிக்கும்.
அனைத்து வகை வாகனங்களுக்கும் வரியை உயர்த்தும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில சாலைகளை முறையாக பராமரிக்கிறதா என்றால் முற்றிலும் இல்லை. வாகனங்கள் சாலையில் பயணிக்கவே முடியாத சூழல்தான் நிலவுகிறது. அதிகமான விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. தமிழக அரசும், போக்குவரத்து துறையும், மக்களின் நலன் கருதி வாகனங்கள் வரி உயர்வை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்