பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை விரைந்து அமல்படுத்துவது தொடர்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் விவேக் ஜோஷி ஆலோசனை நடத்தினார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை விரைந்து அமல்படுத்துவது தொடர்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் நேற்று (12.10.2023) சண்டிகரில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின்  செயலாளர் திரு விவேக் ஜோஷி தலைமை வகித்தார். இந்தக் கூட்டங்களில் இரு மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச அரசுகளின் மூத்த அதிகாரிகள், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய கைவினை மற்றும் திறன்களில் ஈடுபட்டுள்ள தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தடையற்ற பதிவு, விரைவான சரிபார்ப்பு ஆகியவற்றை உறுதி செய்யுமாறு மாநில அரசு களப்பணியாளர்களை மத்திய நிதிச்சேவைகள் துறைச்  செயலாளர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தின் போது, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பிராந்திய இயக்குநரகம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உள்ளிட்டவை விரிவான செயல்திட்ட விளக்கக்காட்சிகளை வழங்கின. பிரதமரின்  விஸ்வகர்மா திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

எம்.பிரபாகரன்

Leave a Reply