அரசுக்கும் மின் துறையில் உள்ள மற்ற அனைத்துத் தரப்பினருக்கும் தொழில்நுட்ப மற்றும் கொள்கை ஆதரவை வழங்கும் அமைப்பான மத்திய மின்சார ஆணையம் இன்று (15-10-2023) தனது 50 வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது. நாட்டின் அனைத்து நுகர்வோருக்கும் போதுமான தரத்துடன் நம்பகமான 24 மணி நேர மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான தொலைநோக்குப் பார்வையை நோக்கி செயல்படும் இந்த அமைப்பு, நாட்டின் மின்சார தேவைகளை திட்டமிடுவதிலும் நிர்வகிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதுதில்லியில் நடைபெற்ற இதன் 50-வது நிறுவன தின விழாவில் மத்திய மின் துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் மின்துறை செயலர் திரு பங்கஜ் அகர்வால், மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் திரு கன்ஷியாம் பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு ஆர்.கே.சிங், மின் துறை மற்றும் அதன் அமைப்புகளில் சீர்திருத்தங்களின் தேவைகள் என்ன என்பதை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் என்று கூறினார். மாற்றம் மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கான விருப்பத்தை நாம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “
தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் அரசுக்கு மத்திய மின்சார ஆணையம் ஆலோசனை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு அமைப்பையும் வெளிப்படையான முறையில் அணுக வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஒட்டுமொத்த அமைப்பும் சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய மின்சார ஆணையம் பார்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்றவை தொடர்பான தகவல்களை ஆராய்ந்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் திரு ஆர்கே சிங் கூறினார். பெரிய சவால்கள் உள்ளபோதும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டும் எனவும் அப்போதுதான் நமது மின்சார அமைப்பு நவீனமாக மாறும் என்றும் திரு ஆர்கே சிங் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மின்சாரச் சட்டம் 2003-ன் கீழ் மின்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட மின்சார விதிகள் குறித்து மத்திய மின்சார ஆணையத்தால் உருவாக்கப்பட்ட தொகுப்பை மின்துறை அமைச்சர் வெளியிட்டார். இந்நிகழ்வில் மத்திய மின்சார ஆணையத்தைச் சேர்ந்த சிறந்த ஐந்து அதிகாரிகளுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக விருதுகளையும் அமைச்சர் திரு ஆர்.கே. சிங் வழங்கினார்.
மத்திய மின்சார ஆணையம் மற்றும் மின்சாரத் துறையில் அதன் பங்களிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு cea.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
திவாஹர்