கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி,பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆகஸ்ட் -20 ஆம் தேதி அதே வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களிடம் இருந்து 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.பாஸ்கர் என்ற மீனவரின் மண்டை பிளந்து 21 தையல் போடப்பட்டுள்ளது. 5 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மீனவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளையும், மீன்களையும் கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர் அதன் பின்னர் கடந்த செப்டம்பர் 23 மற்றும் 25 தேதிகளிலும் அக்டோபர் 6 ஆம் தேதியும் செருதூர் மற்றும் வெள்ளப் பள்ளம் மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
தற்போது மீண்டும் அக்டோபர் 17ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன் மகாதேவி மீனவர் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே பதினோரு நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு அதிவேக படகில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் , நமது மீனவர்களின் படகில் ஏறி ஐந்து மீனவர்களையும் கட்டை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு படகில் இருந்த திசைகாட்டும் கருவி வாக்கி டாக்கி, டார்ச் லைட்கள், சிக்னல் கருவிகள் 600 கிலோ வலை மற்றும் பிடித்து வைத்திருந்த மீன் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
காயமடைந்த சுப்பிரமணியம் உள்ளிட்ட மீனவர்களை கடலில் தள்ளிவிட்டு கொள்ளை கும்பல் தப்பியுள்ளது.அதே அக்டோபர் 17ஆம் தேதி இரவு வானவன் மகாதேவி மீனவர் தெருவை சேர்ந்த முருகா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நான்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
அவர்களையும் இலங்கை கடற் கொள்ளை கும்பல் கடுமையாக தாக்கி, 15 கிலோ வலை உள்ளிட்ட மீன்பிடி கருவிகளையும், பிடித்து வைத்திருந்த 40 கிலோ மீன் மற்றும் மீனவர்களின் உடைமைகளையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த இரண்டு படகுகளிலும் ஒன்பது மீனவர்கள் தாக்கப்பட்டு படு காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 5 லட்ச ரூபாய் இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை நடத்துவது ஆறாவது முறையாக நடந்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் படை வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.
ஒன்றிய பாஜக அரசு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளே வந்து தாக்குதல் நடத்துவதையும் நமது மீனவர்களை கைது செய்வதையும் தடுக்க முயற்சிக்கவில்லை.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்து அவர்களின் ஐந்து படகுகளையும் இலங்கை கடற்படை பறித்துச் சென்றுள்ளது.இலங்கை கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பாஜக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விடுதலை செய்து மீன்பிடி படகுகளை திரும்பப் பெறவும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்