வனங்களுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (யு.என்.எஃப்.எஃப்) ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசத்தால் வழி நடத்தப்படும் முன்முயற்சி (சி.எல்.ஐ) நிகழ்வை உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (எஃப்.ஆர்.ஐ) அக்டோபர் 26 முதல் 28 வரை நடத்துகிறது.
ஐக்கிய நாடுகளின் காடுகள் பற்றிய மன்றம் அனைத்து வகையான காடுகளின் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. யு.என்.எஃப்.எஃப்-இன் நிறுவன உறுப்பினர் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 2017-2030 காலகட்டத்திற்கான காடுகளுக்கான முதல் ஐ.நா. உத்தி சார்ந்த திட்டத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்தத் திட்டம் காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் உள்பட அனைத்து வகையான காடுகளின் நிலையான மேலாண்மையை அடைவதற்கும், காடழிப்பு மற்றும் வன சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கும் அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கைகளுக்கான உலகளாவிய கட்டமைப்பாக செயல்படுகிறது.
நிலையான வன மேலாண்மை மற்றும் காடுகளுக்கான ஐ.நா உத்தி சார்ந்த திட்டம் என்பவற்றை அமல்படுத்துவது தொடர்பாக யு.என்.எஃப்.எஃப்-இன் கலந்துரையாடல்களுக்கு பங்களிப்பதே இந்த முன்முயற்சியின் பிரதான இலக்காகும். எஸ்.எஃப்.எம் மற்றும் யு.என்.எஸ்.பி.எஃப் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக யு.என்.எஃப்.எஃப் உறுப்பு நாடுகளிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை எளிதாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. காட்டுத் தீ மற்றும் வன சான்றிதழ் சம்பந்தப்பட்ட கருப்பொருள் குறித்து இதில் விவாதிக்கப்படும். இந்நிகழ்வின் போது, யு.என்.எஃப்.எஃப் உறுப்பு நாடுகள், ஐ.நா அமைப்புகள், பிராந்திய மற்றும் துணை பிராந்திய பங்குதாரர்கள் மற்றும் முக்கிய குழுக்களின் வல்லுநர்கள் விவாதிப்பார்கள்.
முறையான கூட்டம், அக்டோபர் 26 அன்றுதொடங்கும். இந்த நிகழ்ச்சியில் காட்டுத் தீ மற்றும் வனச்சான்று ஆகிய வழிகாட்டும் கருப்பொருள்கள் குறித்த கலந்துரையாடல் மற்றும் ஒரு நாள் களப்பயணம் ஆகியவை அடங்கும். காடுகளுக்கான ஐ.நா உத்தி சார்ந்த திட்டத்தின் (யு.என்.எஸ்.பி.எஃப்) உலகளாவிய வன இலக்குகளை முன்னெடுப்பதில் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பகுதிகளில் நல்ல நடைமுறைகளைப் பகிர்வதை ஊக்குவிக்கும்.
சமீபத்திய ஆண்டுகளில், உலகம் காட்டுத்தீயின் அளவு மற்றும் கால அளவுகளில் ஆபத்தான அதிகரிப்பைக் கண்டுள்ளது, இது பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் சேவைகள், மனித நல்வாழ்வு, வாழ்வாதாரங்கள் மற்றும் தேசிய பொருளாதாரங்களில் ஆழமான தாக்கங்களுக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மில்லியன் ஹெக்டேர், அதாவது, உலக வனப் பரப்பில் 3% க்கு சமமான காட்டுப் பகுதிகள் தீயால் பாதிக்கப்படுகின்றன. இந்த தீ விபத்தின் தீவிரம் பல உயர்மட்ட நிகழ்வுகளால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, இதன் விளைவாக ஆரோக்கியமற்ற காற்றின் தரம் மற்றும் மனித உயிர்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் சொத்துக்களின் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்படுகின்றன.
இக்கூட்டத்தில் 40 நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், நேரிலும், இணைய வழியிலும் பங்கேற்கின்றனர். 2024 மே மாதம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் திட்டமிடப்பட்டுள்ள யு.என்.எஃப்.எஃப் இன் 19வது அமர்வில் விவாதிக்க பரிசீலிக்கப்படும் நிலையான வன மேலாண்மைக்கு வழிவகுக்கும் காட்டுத் தீயை நிர்வகிப்பதற்கான செயல்படுத்தக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் பரிந்துரைகளை இந்த கூட்டம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்