சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் தில்லி சுங்கத் தடுப்பு மண்டலம் ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை அழித்தது .

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மேற்கொண்ட சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சகத்தின் சுங்க தடுப்பு மண்டலம், தில்லியில்  ரூ .284 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ரூ.9.85 கோடி மதிப்புள்ள 80.2 லட்சம் வெளிநாட்டு மூல சிகரெட்டுகளை பாதுகாப்பான முறையில் அழித்தது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வருவாய்த்துறை செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா, சட்டவிரோத பொருட்களை அழிப்பது, சிறப்பு இயக்கத்திற்கு வெளியேயும் சுங்கத் துறையால் மேற்கொள்ளப்படும்  தொடர்ச்சியான நடைமுறையாகும்.  இருப்பினும், சிறப்பு இயக்கம் இந்த நடைமுறைக்கு ஊக்கமளித்துள்ளது என்றார்.

தசரா பண்டிகையின் போது சட்டவிரோத பொருட்களை அழிப்பதற்கும் ராவணனை எரிப்பதற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டிய திரு மல்ஹோத்ரா, இன்றைய நடவடிக்கைகள் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கின்றன என்றும், இளைய தலைமுறையினரைக் காப்பாற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர துறையின் உறுதிப்பாட்டை  வலியுறுத்தினார்.

இன்று அழிக்கப்பட்ட  போதைப் பொருட்களில் 29 கிலோ ஹெராயின், 6 கிலோ கோகைன், 7 கிலோ ஆம்பெடமைன் மற்றும் ‘காதா எடுலிஸ்’ என்று அழைக்கப்படும் 286 கிலோ காட் இலைகள் அடங்கும். இன்று அழிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளில் பெரும்பகுதி 2018 ஆம் ஆண்டிலும், சிறிதளவு 2023-ம் ஆண்டிலும் பறிமுதல் செய்யப்பட்டவை. சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (கோட்பா), 2003 ஐ மீறி இந்தியாவுக்குள் கடத்தப்பட்டதால் இந்த சிகரெட்டுகள் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

2023 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் 8,308 கோப்புகள் அகற்றப்பட்டு, 9,304 கிலோ தேவையில்லாப் பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 46,565 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக, போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியா மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகளில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது.

Leave a Reply