வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்!-ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆகவுள்ளது. இந்த மழையை எதிர்நோக்க தமிழகம் தயாராக வேண்டும். மழைநீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தை, அடைமழைக் காலம் என்போம். இந்த காலக்கட்டதில் மழை என்பது நான்கு, ஐந்து நாட்கள் தொடர்ந்து பெய்யும் தன்மை கொண்டது. இந்நேரத்தில் அதிகமான மழை பொழிவு ஏற்படும். அந்நீரை முறையாக சேமிக்க வேண்டும்.

இக்காலக்கட்டத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் உருவாக வாய்ப்புள்ளது என்று வானில ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆகவே அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நிலத்தடி மழைநீர் சேமிப்பு திட்டம் அனைத்து இல்லங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவற்றை தற்பொழுது மீண்டும் சரிசெய்து நிலத்தடியில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கையை அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு நகராட்சி மற்றும் மாநகராட்சி சாலைகள் பழுதடைந்து வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையுள்ளது. தற்பொழுது பெய்யும் மழையால் அவை மேலும் பழுதடைய வாய்ப்புள்ளது. ஆகவே சாலைகளையும், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் பணியையும் முடித்து, மக்களின் இயல்புநிலை பாதிக்காமல் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply