இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான காஜிண்ட்-2023இல் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைப்பிரிவு, கஜகஸ்தான் பயணம் .

‘காஜிண்ட்-2023’ கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 120 பேர் கொண்ட இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக் குழு இன்று கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றது. கஜகஸ்தானின் ஓட்டார் நகரில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்திய ராணுவத்தில், டோக்ரா படையைச் சேர்ந்த பிரிவின் தலைமையில் 90 வீரர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கஜகஸ்தான் படைப்பிரிவு, பிரதானமாக கஜகஸ்தான் தரைப்படைகளின் தெற்கு பிராந்திய தலைமையைச் சேர்ந்த வீரர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இரு தரப்பையும் சேர்ந்த 30 விமானப்படை வீரர்களும் ராணுவ வீரர்களுடன் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா- கஜகஸ்தான் இடையேயான கூட்டுப் பயிற்சி, 2016-ஆம் ஆண்டு ‘பிரபால் டோஸ்டைக்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இரண்டாவது பதிப்பிற்குப் பிறகு, இது, நிறுவன அளவிலாக மேம்படுத்தப்பட்டு ,’காஜிண்ட் பயிற்சி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு விமானப் படைப் பிரிவையும் சேர்த்து இருவழிப் பயிற்சியாக இந்தப் பயிற்சி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பதிப்பில், இரு தரப்பினரும் ஐ.நா.வின் ஆணையின் கீழ் மரபுசாரா சூழலில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை பயிற்சி செய்வார்கள். படையெடுப்பு, தேடுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இந்தக் குழுக்கள் கூட்டாக ஒத்திகை செய்யும். ஆளில்லா வானூர்தி அமைப்பு நடவடிக்கைகளை நடத்துவதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் போது, தந்திரோபாயங்கள், போர்ப் பயிற்சிகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி இரு தரப்பினரும் நுண்ணறிவைப் பெற ‘காஜிண்ட்-2023 பயிற்சி’ ஒரு வாய்ப்பை வழங்கும். இந்தக் கூட்டுப் பயிற்சியானது, நகர்ப்புறம் சார்ந்த மற்றும் நகர்ப்புற சூழல்களில் கூட்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான திறன்கள், மீள்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்கும்.

இரு தரப்பினரும் பரந்த அளவிலான போர்த் திறன்களில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்பயிற்சியானது, படைப்பிரிவுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும். ‘காஜிண்ட்-2023 பயிற்சி’, இரு நாட்டு ராணுவங்களுக்கிடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

திவாஹர்

Leave a Reply