சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் .

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று (29-10-2023) நடைபெற்ற ஹிகாஷி ஆட்டிசம் பள்ளியின் தொடக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், இத்தகைய குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குவதை நோக்கிய ஒரு பாதையை உருவாக்குமாறு அவர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அனைத்து வசதிகளையும் தியாகம் செய்து, அனைத்து பொறுப்புகளையும் தனது தோளில் தாய் சுமப்பதாக அவர் குறிப்பிட்டார். குழந்தைகள் சவாலை எதிர்கொள்ளும்போது ஆண்களும் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களுடனும் தோளோடு தோள் நின்று பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒரு குழந்தை மன இறுக்கத்தின் சவாலை எதிர்கொள்ளும்போது ஒரே மாதிரியான அணுகுமுறை பலன் அளிக்காது என்று அவர் கூறினார். திரு தன்கர் ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பிட்ட தேவைகள் உள்ளன என்றும் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்றும் அவர் தெரிவித்தார். யோகா சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் தினசரி வாழ்க்கை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டத்தைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், இதுபோன்ற அணுகுமுறைகள் சிறப்பு குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பயனுள்ள வழிமுறைகள் என்று குறிப்பிட்டார்.

டோக்கியோ மற்றும் பாஸ்டனைத் தொடர்ந்து உலகளவில் மூன்றாவதாக ஹிகாஷி ஆட்டிசம் பள்ளி தில்லியில் திறக்கப்படுவது குறித்துக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் நலன் மற்றும் நல்வாழ்வில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக பள்ளியின் தலைவர் திருமதி ரஷ்மி தாஸைப் பாராட்டினார்.

பள்ளிக்குச் செல்வதை ஒரு ‘ஆன்மீகப் பயணம்’ என்று வர்ணித்த குடியரசுத் துணைத் தலைவர், ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்தும் இடைவிடாத முயற்சியில், ஆசிரியர்களின் பணியைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தத்தாத்ரேயா ஹோசபலே, சர்க்கார்யவாஹ், ஹிகாஷி ஆட்டிசம் பள்ளியின் தலைவர் டாக்டர் ரஷ்மி தாஸ், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply