புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் 2023 நவம்பர் 1-ம் தேதி மாலை 4:30 மணியளவில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும், எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக பிரதமரின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 29 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. மொத்த பதக்க எண்ணிக்கை முந்தைய 2018-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியை விட 54 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை, 2018- ல் வென்றதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய பாராலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
எஸ்.சதிஸ் சர்மா