2-வது உலக உள்ளூர் உற்பத்தி மன்றத்தில் பங்கேற்பதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பகவந்த் குபா தலைமையிலான இந்தியக் குழு இன்று நெதர்லாந்து புறப்பட்டுச் செல்கிறது

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் 2023 நவம்பர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் 2 வது உலக உள்ளூர் உற்பத்தி மன்றக் கூட்டத்தில் (டபிள்யூஎல்பிஎஃப்) பங்கேற்பதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு பகவந்த் கூபா தலைமையிலான இந்திய குழு இன்று அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது.

அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறைத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய மருந்துகள் முகமை அலுவலகத்தையும் அமைச்சர் பார்வையிடுகிறார்.

உலக உள்ளூர் உற்பத்தி தளம் என்பது மருந்துகள் மற்றும் பிற சுகாதார தொழில்நுட்பங்களின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும்.

மருந்துத் துறையில் இந்தியா செய்த முக்கியமான பங்களிப்பை வெளிப்படுத்தவும் மற்ற நாடுகள் மற்றும் பலதரப்பு அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் இந்த சந்திப்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்த மன்றம் தொடர்ந்து கலந்துரையாடல்களை எளிதாக்கி சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறது.  மேலும் உள்ளூர் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இது பரிந்துரைகளை உருவாக்கும். இந்த டபிள்யூஎல்பிஎஃப்  கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என 800க்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply