ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் செயலாளர் வி. ஸ்ரீனிவாஸ், பெங்களூருவில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தை ஆய்வு செய்தார் .

ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத் துறை, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (டிஎல்சி) எனப்படும் ஜீவன் பிரமானை பரவலாக ஊக்குவித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டில், பயோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  மற்றும் தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் எந்தவொரு ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட் தொலைபேசியிலிருந்தும் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும். இந்த வசதியின்படி, முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மூலம் ஒரு நபரின் அடையாளம் நிறுவப்பட்டு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் உருவாக்கப்படுகிறது. நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட இந்த திருப்புமுனைத் தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்கள், வெளிப்புற பயோ-மெட்ரிக் சாதனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தது.

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ், முக அங்கீகாரத் தொழில் நுட்பம் தொடர்பாக அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய வழங்கல் அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை 2022 நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் 37 நகரங்களில் ஒரு இயக்கத்தைத் தொடங்கியது. அதில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டதன் மூலம் இந்த இயக்கம் பெரும் வெற்றி பெற்றது. 17 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள், துறைகள், ஓய்வூதியர்கள் நலச்சங்கம், தனித்துவ அடையாள ஆணையம், தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு தற்போது 2023 நவம்பர் 1 முதல் 30 வரை நாடு தழுவிய இயக்கம் நாடு முழுவதும் 100 நகரங்களில் 500 இடங்களில் நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று (04-11-2023) பெங்களூரு சென்ற ஓய்வூதியத்துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீநிவாஸ் தலைமையிலான குழு, இந்த இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கப் பிரதிநிதிகளிடையே பேசிய ஓய்வூதியத்துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீநிவாஸ், இந்த நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு வங்கியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை வலியுறுத்தினார்.

பாரத ஸ்டேட் வங்கியின் பெங்களூரு வட்டத் தலைமைப் பொது மேலாளர் திரு கிருஷ்ணா சர்மா பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார். பெங்களூரு வட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து இந்த இயக்கம் வெற்றி அடைய, பாரத ஸ்டேட் வங்கி அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.  இதில், 400-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply