இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசையான கலர்ஸ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற முன்முயற்சியுடன் இணைந்து செயல்படுகிறது. பெண் குழந்தைகளைக் கைவிடும் பிரச்சினையை நிவர்த்தி செய்ய புதிய புனைக்கதை நிகழ்ச்சியான “டோரீ” என்ற இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் ஒளிபரப்புகிறது.
பெண் குழந்தைகள் கைவிடப்படுவதன் சமூக தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கலர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. டோரீ தொடர் 2023 நவம்பர் 6 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது,
.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் பெண்கள் மற்றும் குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதன் மூலம் வரையறுக்கப்படுகிறது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற முன்முயற்சியில் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நம் நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசையான கலர்ஸ் இந்த முயற்சியில் இணைந்து, பெண் குழந்தைகள் கைவிடப்படும் முக்கியமான ஆனால் கவனிக்கப்படாத பிரச்சினையைப் பற்றிய ‘டோரீ’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளதாக திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
கலர்ஸ் தொலைக்காட்சியை நடத்தி வரும் வயாகாம் 18 நிறுவனத்தின் பொழுதுபோக்கு ஒளிபரப்புப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு கெவின் வாஸ் கூறுகையில், எங்கள் புதிய நிகழ்ச்சியான டோரீ பெண் குழந்தைகள் கைவிடப்படும் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், டோரீ பல லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்து சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
திவாஹர்