உயர்தரமான நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல், நகர்ப்புறங்களில் சேவை வழங்கலை மேம்படுத்துதல், திறமையான நிர்வாக அமைப்புகள் போன்றவற்றுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 400 மில்லியன் டாலர் கொள்கை அடிப்படையிலான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று (13-11-2023) கையெழுத்திட்டது.
நிலையான நகர்ப்புற மேம்பாடு மற்றும் சேவை வழங்கல் திட்டத்தின் துணைத் திட்டம் 2-க்கான கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இணைச் செயலாளர் திருமதி ஜூஹி முகர்ஜி, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியப் பிரிவு இயக்குநர் திரு டகேயோ கொனிஷி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த 350 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் 2021 ஆம் ஆண்டில் துணை திட்டம் 1 அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இந்தத் துணைத் திட்டம் -2 மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிலைகளில் முதலீட்டுத் திட்டமிடல் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.
கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பேசிய திருமதி ஜூஹி முகர்ஜி, அனைவரையும் உள்ளடக்கிய, நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய மற்றும் நிலையான வகையில் உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நகரங்களை வளர்ச்சியின் மையங்களாக மாற்ற முடியும் என்றார். இதை நோக்கமாகக் கொண்ட நகர்ப்புற சீர்திருத்தங்களில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாகவும் அதை இந்தத் துணைத் திட்டம் ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைவருக்கும் பாதுகாப்பான தூய குடிநீர் வழங்கல் மற்றும் தூய்மை சேவைகளை இலக்காகக் கொண்ட அம்ருத் 2.0 திட்டத்துக்கு இந்தத் துணைத் திட்டம் -2 ஊக்கமளிக்கும் என்று திரு டகேயோ கொனிஷி கூறினார்.
திவாஹர்