மத்திய செயலக அலுவல் மொழி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தனர்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு),  பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சிறிதும் தாமதமின்றி சரியான நேரத்தில் பதவி உயர்வுகளை உறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளது என்று கூறினார்.

புதுதில்லியில் தன்னைச் சந்தித்த மத்திய செயலக அலுவல் மொழி சேவா சங்கத்தின் தூதுக்குழுவுடன் அமைச்சர் பேசினார். பெருமொத்தப் பதவி உயர்வுகளுக்கு உத்தரவிட்டதன் மூலம் தாமதமான பதவி உயர்வு வழக்குகளுக்குத் தீர்வுகண்டதற்காகத் தூதுக்குழு உறுப்பினர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அலுவல் மொழி அதிகாரிகள் தொடர்பான மீதமுள்ள வழக்குகளையும் இதேபோன்று முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் உள்ள அரசு ஊழியர்களின் சரியான நேரத்தில் பதவி உயர்வுகள் குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர் அமைச்சகம் சமமாக அக்கறை கொண்டுள்ளது என்று உறுதியளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜூன் மாதத்தில், ஏ.எஸ்.ஓ.க்கள் நிலையில் பணிபுரியும் 1,592 அதிகாரிகளுக்குத் தற்காலிக அடிப்படையில் எஸ்.ஓ.க்கள் பதவிக்கு பெருமொத்தப் பதவி உயர்வு வழங்க பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

டி.ஓ.பி.டி.க்கு பொறுப்பான டாக்டர் ஜிதேந்திர சிங்கின் அறிவுறுத்தலின் பேரில் பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்பட்டன, அவர் முழு செயல்முறையையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 9,000 பெருமொத்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன என்றும், அதற்கு முன்பு முந்தைய மூன்று ஆண்டுகளில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 4,000 பதவி உயர்வுகளை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

பெருமொத்தப் பதவி உயர்வுகளை அங்கீகரிப்பதில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் தனிப்பட்ட தலையீட்டிற்கு நன்றி தெரிவித்த தூதுக்குழுவின் உறுப்பினர்கள், பதவி உயர்வு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், ஊழியர்களின் மன உறுதியை பாதிக்கும் என்பதால், தங்கள் பிரிவில்  பதவி உயர்வு கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு பொறுப்பான அமைச்சரை கேட்டுக்கொண்டனர்.

டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், கடினமாக உழைக்கும் மற்றும் செயல்திறன் கொண்ட அதிகாரிகளுக்கு வேலை நட்பு சூழலை வழங்க வேண்டும் என்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி மிகவும் ஆர்வமாக உள்ளார், அதே நேரத்தில், சரியான நேரத்தில் சேவை நன்மைகளை வழங்க வேண்டும், இதனால் அவர்கள் தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களால் முடிந்ததை வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், உயர் தரங்களில் காலியிடங்கள் இல்லாமை மற்றும் பிற பணியாளர் பிரச்சினைகள் காரணமாக கடந்த காலத்தின் பாரம்பரியமாக இருக்கும் பல்வேறு மத்திய அமைச்சகங்களில் நீண்டகால தேக்கநிலை பிரச்சனைகளை அரசு அவ்வப்போது மறுஆய்வு செய்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நிர்வாகத்தின் கீழ் மட்டத்தில் பணிபுரியும் சில ஊழியர்கள் தங்கள் முழுப் பணிக் காலத்தையும் 30 முதல் 35 ஆண்டுகள் வரை ஒரு பதவி உயர்வு கூட பெறாமல் செலவிடும் சில நிலைகளில் நீண்ட தேக்கநிலை குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. துறையின் அனைத்து மூத்த அதிகாரிகளுடனும் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாகவும், நிர்வாகத்தின் நடுத்தர மற்றும் கீழ் மட்டங்களில் தேக்கநிலையைத் தவிர்க்க பல புதுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் டிஓபிடி அமைச்சர் கூறினார்.

பல வழக்குகளில், பதவி உயர்வுகளில் தேக்கம் ஏற்பட்டதற்கு, முந்தைய அரசுகள் எடுத்த முறையற்ற முடிவுகள் அல்லது விதிகள் திரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வழக்குகளின் விளைவாகும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வருத்தம் தெரிவித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் வழங்கப்பட்ட 4,000 பதவி உயர்வுகளில் ஒரு சிலவற்றில், வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்தபோதிலும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, நீதித்துறை ஆய்வுக்கு சரியான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் அரசு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சி.எஸ்.எஸ் கேடரைச் சேர்ந்த இந்த ஊழியர்களுக்கு பெருமொத்தப் பதவி உயர்வுக்கான உத்தரவுகள் முந்தைய மாதங்களில் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் டி.ஓ.பி.டி.யில் பல சுற்று உயர்மட்டக் கூட்டங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டன.

டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நிர்வாகத்தை எளிதாக்குவதற்காகவும், குழுவில்  புறநிலைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவும், பதவி உயர்வுகளை மேற்கொள்வதில் அகநிலை விருப்பங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது.

“மனித இடைமுகத்தைக் குறைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி நடைமுறைகள் மிகவும் உயர் தொழில்நுட்பம் ஆக்கப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

நிர்வாக சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, காலாவதியான அல்லது காலப்போக்கில் பொருத்தமற்ற 1,600 க்கும் மேற்பட்ட விதிகளை அரசு நீக்கியுள்ளது என்று டிஓபிடி அமைச்சர் கூறினார்.

“இவை அனைத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை வழங்குவதை உறுதி செய்வது மட்டுமின்றி, ஊழியர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப செயல்படவும் உதவுகின்றன,” என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply