ஆசியான் நாடுகளுக்கான இந்தியத் தூதரகம், வேளாண்மை, மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து ஆசியான்-இந்தியா சிறுதானியத் திருவிழா 2023-ஐ இந்தோனேசியாவில் 2023 நவம்பர் 22 முதல் 26 வரை நடத்துகிறது . இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள முக்கிய பெரும் வணிக வளாகமான கோட்டா கசாபிளாங்கா-வில் திருவிழாவின் தொடக்க அமர்வு நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை மையமாகக் கொண்ட கண்காட்சி நடத்தப்படுகிறது, இதில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்கள், இந்திய சமையல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
ஆசியான் உறுப்பு நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் சிறுதானியங்கள், அது சார்ந்த பொருட்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சந்தையை உருவாக்குவதும் இத்திருவிழாவின் நோக்கமாகும். இந்தத் திருவிழாவின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இந்தியாவில் இருந்து ஒரு தூதுக்குழுவை வழிநடத்துகிறது, இது சமையல்கலைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், மாநில அதிகாரிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இந்திய சிறுதானிய சுற்றுச்சூழல் அமைப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் வல்லுநர்களாப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நவம்பர் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த நேரடி சமையல் பட்டறையில், இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர்கள் சிறுதானியங்களின் சமையல் திறனை வெளிப்படுத்துவார்கள்.
ஆசியான் நாட்டுக்கான இந்தியத் தூதர் திரு. ஜெயந்த் கோப்ரகடே தனது வரவேற்புரையில், உலகளாவிய பசி, ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சிறுதானியங்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். கூடுதலாக, இந்தோனேசியாவின் தேசிய உணவு முகமையின் தலைவர் திரு ஆரிஃப் பிரசேத்யோ ஆதி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் எதிர்காலத்தில் சிறுதானியங்கள் விவசாயிகளுக்கு உகந்த, நீடித்த உணவுத் தேர்வாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
திவாஹர்