குருகிராமில் உள்ள ஹரியானா பொது நிர்வாக நிறுவனத்தில் 98 வது சிறப்பு அடிப்படைப் பயிற்சி பெறும் அதிகாரிகள் குழுவினர் இன்று (நவம்பர் 24, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தது.
அதிகாரிகள் இடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நாட்டின் பன்முக வளர்ச்சியில் அரசு அதிகாரிகள் பெரும் பங்காற்றி வருவதாகவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் அவர்கள் பொறுப்பு வகிப்பதாகவும் குறிப்பிட்டார். இன்று நாடு சந்தித்து வரும் மாற்றம் நமது அரசு ஊழியர்களின் பங்களிப்பு காரணமாகவே சாத்தியமாகிறது என்று அவர் கூறினார்.
அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சி என்ற இலக்கை அடைவது அரசு ஊழியர்களின் கடமை என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியக் குடிமக்கள் தீவிரமாக பங்கேற்கின்றனர். பல்வேறு திட்டங்களின் நோக்கங்களை அடைய மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்லாட்சி என்பதன் பொருள் மாறுகிறது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார் . சமீபத்திய தொழில்நுட்ப வருகையுடன், மின்னணு ஆளுமை, ஸ்மார்ட் ஆளுமை, பயனுள்ள நிர்வாகம் போன்ற சொற்கள் குடிமக்களுக்கு விரைவான மற்றும் திறமையான சேவையை வழங்குவதை உறுதி செய்கின்றன என்று அவர் மேலும் கூறினார் .
சமூக வலைத்தளங்களில் மக்கள் தமது குறைகளை உடனுக்குடன் பதிவு செய்யும் நாட்களில், மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு புதுப்பிக்கப்பட்ட ஆளுகைக் கருவிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். பொதுமக்களின் குறைகள், பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டியது அரசு ஊழியர்களின் கடமையாகும். குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு குடிமக்களுக்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் இதுபோன்ற புதுமையான நடவடிக்கைகளை இளம் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா