புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி-2023-ல் முதல் முறையாக சுரங்க அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சுரங்க அரங்கம், “சுரங்கத்திற்கு அப்பால் இணைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் பார்வையாளர்களுக்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்களை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
கடந்த 10 நாட்களில், சுமார் முப்பத்தைந்தாயிரம் பார்வையாளர்கள் அரங்கைப் பார்வையிட்டுள்ளனர். நமது அன்றாட வாழ்க்கையில் சுரங்கம் மற்றும் கனிமங்களின் முக்கியப் பங்கு குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள், வீராங்கனை தீபா மாலிக், முன்னாள் ஹாக்கி வீரர்கள் ஜாஃபர் இக்பால், அசோக் குமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் தாஹியா, ரயில்வே வாரிய உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அரங்கைப் பார்வையிட்டனர்.
சுரங்க அமைச்சகம் சுரங்க அரங்கில் மாணவர்களுக்கான மறுசுழற்சி குறித்த பயிலரங்கை ஏற்பாடு செய்தது. இதில் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நமது அன்றாட வாழ்க்கையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் முக்கியத்துவத்தில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். சுற்றுச்சூழல் பொறுப்புக்கான உறுதிமொழியை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.
குழந்தைகள் மண்டலத்தின் இந்தியப் புவியியல் ஆய்வு அரங்கில், லட்சக் கணக்கான ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்துள்ள டைனோசர் முட்டைகள் மற்றும் புதைபடிவ மாதிரிகளைக் குழந்தைகள் பார்வையிட்டனர்.
மெய்நிகர் மண்டலத்தில் சிமுலேட்டர்கள் மூலம் சுரங்கம் தோண்டுவதற்கான சவால்கள் மற்றும் சாகசங்களை பார்வையாளர்கள் அனுபவித்தனர், இது தாதுக்களை பிரித்தெடுக்க பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான அடி ஆழத்தை அடையும் உணர்வை ஏற்படுத்துகிறது.
எம்.பிரபாகரன்