2023, நவம்பர் 24 அன்று புதுதில்லியில் நடைபெற்ற வருடாந்திர இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமானே, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் திரு டேவிட் வில்லியம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். பிராந்திய பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்த அவர்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் சாத்தியமான ஒத்துழைப்பு, ஏவுகணை அமைப்புகள், மின்சார உந்துவிசை ஆகியவற்றில் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு முன்மொழிவுகள் குறித்தும் விவாதித்தனர்.
கூட்டுப் பயிற்சிகள், கடல்சார் கள விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் அதிகரித்த தொடர்புகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்கு இரு தரப்பினரும் திட்டமிட்டனர் . இந்தியா- இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு (2+2) உரையாடலின் தொடக்கத்தையும், அனைத்துத் துறைகளிலும் ராணுவ ஈடுபாடுகளின் வேகத்தையும் அவர்கள் பாராட்டினர் .
பின்னர் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் திரு டேவிட் வில்லியம்ஸ் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா