தமிழகத்தில் வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்ததால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சீரழிந்து வருகின்றனர். மதுவால் நாள்தோறும் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வன்புணர்வு என்று குற்ற செயல்கள் கூடிக்கொண்டே போகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் வணிக வளாகங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் மூலம் (Automatic Vending Machine) மது விற்பனையை துவங்கிய போது, பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி அது கைவிடப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தில் “டெட்ரா பேக்” மூலம் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தமிழ்நாடு மதுவிலக்கு ஆயாத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மதுவிலக்கிற்கு என்று ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அந்த அமைச்சகமே மதுவை விற்கும் அதிசயம் தமிழக்தில் மட்டும் தான் நடக்கிறது.
ஏற்கனவே மதுவிற்பனையால் மக்கள் சீரழிந்து வரும் நிலையில் புதிதாக எல்லோரும் எளிதாக, கூச்சம் இல்லாமல் வாங்கும் வகையில், குளிர்பானம் போல் அட்டைப் பெட்டியில் அடைத்து “டெட்ரா பேக்” மூலம் மதுவிற்பனையை துவங்க இருப்பது இளைஞர்கள், மாணவர்களின் சீரழிவிற்கு பெரிதும் வழிவகுக்கும். ஒருபுறம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று கூறும் தமிழக அரசு மறுபுறம் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து, மதுவில் இருந்து மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு செல்வது அபத்தமாக இருக்கிறது.
பெரும்பாலும் குற்றச் செயலுக்கு அடித்தளமாக மதுவின் தாக்கமே இருக்கிறது. அதோடு ஏழை, எளிய குடும்பங்களின் வருமானம் பெரும் பகுதி மதுக்கடைகளுக்கு செல்கிறது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையின் பிடியிலும், பொருளாதார சிக்கலிலும் சிக்கி தவிப்பது அரசின் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?.
வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு புதுப்புது வழியில் மதுவின் விற்பனையை அதிகரித்து மக்கள் மீது அக்கரையில்லாத அரசாக செயல்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எக்காரணத்ததை கொண்டும் “டெட்ரா பேக்” மது விற்பனையை தமிகத்தில் கொண்டுவரக் கூடாது.
மீறி கொண்டு வந்தால் அதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்