இந்திய கடலோரக் காவல்படையால் 25 நவம்பர் 2023 அன்று குஜராத்தின் வாடினாரில் 9வதுதேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் டிஜி ராகேஷ் பால் மற்றும் தலைவர் என்ஓஎஸ்டிசிபி ஆகியோர் பயிற்சியின் போது அனைத்து முகமைகளின் தயார்நிலையை ஆய்வு செய்தனர். மத்திய மற்றும் கடலோர மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், துறைமுகங்கள், எண்ணெய் கையாளும் முகமைகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். 31-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள், 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
தேசிய எண்ணெய் கசிவு பேரழிவு தற்செயல் திட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி கடலில் எண்ணெய் கசிவைச் சமாளிக்க பல்வேறு வள முகமைகளுக்கு இடையிலான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் அளவைச் சோதிக்கும் அதன் நோக்கத்தை இந்தப் பயிற்சி நிறைவேற்றியது.
மாசு தடுப்புக் கப்பல்கள், கடல் ரோந்துக் கப்பல்கள், உள்நாட்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் எம்.கே -3 மற்றும் டோர்னியர் விமானம் உள்ளிட்ட மேற்பரப்பு மற்றும் காற்று தளங்களை ஐ.சி.ஜி நிலைநிறுத்தியது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்குப் பார்வையின் கீழ் ‘மேக் இன் இந்தியா’ உந்துதலின் அடிப்படையில் இந்தியாவின் தொழில்துறை ஆற்றலையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. முக்கிய துறைமுகங்கள் போன்ற பங்குதாரர்களும் கடல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளைக் காண்பிப்பதற்காக தங்கள் கடல்சார் சொத்துக்களைப் பயன்படுத்தினர்.
07 மார்ச் 1986 அன்று இந்தியக் கடலோரக் காவல்படை இந்தியாவின் கடல் மண்டலங்களில் கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது. இந்தப் பொறுப்புகள் கப்பல் அமைச்சகத்திடமிருந்து மாற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, கடலோரக் காவல்படை கடலில் எண்ணெய் கசிவு பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்காக என்.ஓ.எஸ்.டி.சி.பியை தயாரித்தது, இது 1993 இல் செயலாளர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. கடலோரக் காவல்படை, மும்பை, சென்னை, போர்ட் பிளேர் மற்றும் வாடினார் ஆகிய நான்கு மாசு தடுப்பு மையங்களை அமைத்துள்ளது.
இந்தியக் கடற்பரப்பில் எண்ணெய் கசிவு பேரழிவுகளுக்கு இந்தியாவின் தயார்நிலைக்கு ஒரு வலுவான தேசிய அமைப்பு முக்கியமானது. உண்மையில், இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் 75 சதவீதம் கடல் வழியாக நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. கப்பல்கள் மூலம் எண்ணெய் போக்குவரத்து உள்ளார்ந்த அபாயங்கள் நிறைந்தது, மேலும் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் துறைமுகத்திற்குள் எண்ணெய் பெறும் வசதிகளால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், கடல் விபத்துக்கள் மற்றும் கடலின் எதிர்பாராத ஆபத்துகள் மூலம் எண்ணெய் மாசுபாட்டின் அச்சுறுத்தல் எங்கும் நிறைந்துள்ளது.
இந்தியக் கடற்பரப்பில் எண்ணெய்க் கசிவுகளைச் சமாளிக்கும் மத்திய ஒருங்கிணைப்பு ஆணையமாக இந்திய கடலோரக் காவல்படை செயல்படுகிறது.
திவாஹர்