கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 பேர் தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுத்துறை, பொதுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகும் கூட்டுறவுத்துறை தனியாக ஆள்தேர்வு நடத்துவது நியாயமற்றது.

கூட்டுறவு சங்கங்களுக்கு நியமிக்கப்படவுள்ள 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்றும், மாவட்ட அளவில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வமான அமைப்பான மாவட்ட ஆள்தேர்வு மையம் மூலமாகவே போட்டித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கும் கூடுதலான கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கு மாநில அளவில் தான் ஆள்தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு மாறாக மாவட்ட அளவில் கூட்டுறவுத் துறையே நேரடியாக ஆள்களை நியமிப்பது முறையல்ல.

கூட்டுறவு சங்கங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் 74-ஆம் பிரிவின்படி மாவட்ட ஆள்தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டிருப்பது உண்மை தான். அதே நேரத்தில் மாவட்ட ஆள்தேர்வு மையம் மூலம் பணியாளர்களை நியமிப்பதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக ஆட்சியின் போது நியாயவிலைக்கடை ஊழியர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடந்த போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. ஒரு கட்டத்தில் அந்த ஆள் தேர்வு கைவிடப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அவற்றுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமே இனி தேர்ந்தெடுத்து வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான சட்டத் திருத்தமும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டது. இதற்கான காரணங்கள் அனைத்தும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் நியமனத்திற்கும் பொருந்தும் எனும் நிலையில், அவர்களை மட்டும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இது தமிழக அரசின் நோக்கத்தையே சிதைத்து விடக்கூடும்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் காலியாக உள்ள 2534 தொடக்க நிலை பணியிடங்களை நகராட்சி நிர்வாகமே, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க தமிழக அரசு கடந்த 14-ஆம் நாள் அனுமதி வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட அதேகாலத்தில் கூட்டுறவுத்துறை பணியாளர்களும் அத்துறையின் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு துறையும் தனித்தனியாக ஆள்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கினால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வேலையில்லாமல் போய்விடும். தேர்வாணையத்திற்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கி இயற்றப்பட்ட சட்டமும் பயனற்றதாகி விடும்.

அதிலும் குறிப்பாக, கூட்டுறவு சங்கங்களுக்கான உதவியாளர்களும், இளநிலை உதவியாளர்களும் மாவட்ட அளவில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால், தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானோர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது பெரும் சமூக அநீதி. இந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆள்தேர்வு அறிவிக்கையை திரும்பப் பெற்று அந்தப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்கவும் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply