இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்கள் தரமான உற்பத்திக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். 2023, நவம்பர் 29 அன்று புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தர மாநாட்டின் முழு அமர்வில் பேசிய அவர், தரமான தயாரிப்புகள் மட்டுமே உலகளாவிய தேவையை உருவாக்குகின்றன என்று கூறினார்.
இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு ஏற்றுமதியாளராகவும் மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையை நனவாக்க இது உதவும் என்றும் அவர் கூறினார்.
தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகள், தங்கள் உபகரணங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன என்பதைப் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். நல்ல தரம் காரணமாக, இறக்குமதி செய்யும் நாடுகள் அதிநவீன பொருட்களுக்கு மிக உயர்ந்த விலையைக் கூட வழங்கத் தயாராக உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உயர்தரத் தயாரிப்புகள் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங், அத்தகைய உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது உலகளாவிய தேவையை அதிகரிக்கும் என்றும் சர்வதேச சந்தையில் இந்தியாவின் நற்பெயரை அதிகரிக்கும் என்றும் கூறினார். தரமான பாதுகாப்புத் தளவாடப் பொருட்களைத் தயாரிக்கும்போது செலவு கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும் திரு ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினார்.
திவாஹர்