நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் (என்.எல்.சி.ஐ.எல்), தற்போதைய தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதில் முன்னோடி நிறுவனமான பெங்களூரு நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை (என்.டி.டி.எஃப்), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னையில் இன்று முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
என்.எல்.சி.ஐ.எல், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் என்.டி.டி.எஃப் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மூலம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.ஐ.எல் இயக்கப் பகுதிகளில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் 540 வாரிசுகளுக்கு வேலை சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். என்.எல்.சி.ஐ.எல் தனது மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்த்தலுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இந்த இலவச குடியிருப்புத் திட்டத்திற்காக ஒரு விண்ணப்பதாரருக்கு ரூ.1.12 லட்சம் செலவிட உறுதியளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறவும், முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் இந்தத் திட்டம் உதவும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், நிர்வாக இயக்குநர் திரு பிரபு கிஷோர்.கே மற்றும் என்.எல்.சி.ஐ.எல் மற்றும் மாநில அரசின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திட்ட மேம்பாட்டிற்காகத் தங்கள் நிலம் மற்றும் வீடுகளை என்.எல்.சி.ஐ.எல்-க்கு வழங்கியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை நோக்கிய என்.எல்.சி.ஐ.எல்-இன் மற்றொரு முக்கிய முன்முயற்சி இதுவாகும்.
எம்.பிரபாகரன்