தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நாளை மறுநாள் மிஜ்ஜாங் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 மாவட்டங்களுக்கு கன மழை, மிக கனமழை இன்னும் 3 நாட்களுக்கு பெய்யும் என்று செய்திகள் வருகின்றது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்துவந்த தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சில பகுதிகளில் விஷப் பூச்சிகள், பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்கி விபத்தை ஏற்படுத்தி அபாயத்திற்கு உள்ளாக்குகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மழை அதிகமாக பெய்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே தமிழக அரசும், மாவட்ட ஆட்சியாளர்களும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும், புயல், மழை நடவடிக்கைப் பணிகளை இடைவிடாமல் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மின் கசிவு விபத்துக்களை தடுக்க வேண்டும். சாதாரண சூழல் ஏற்படும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, இருப்பிடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். திடீர் மழை, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை தமிழக அரசு போர்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்