இந்தியாவில் நுகர்பொருள் மின்னணுத் துறையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார். மின்னணு நுகர்பொருள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 44 வது ஆண்டு விழாவில் நேற்று உரையாற்றிய அமைச்சர், நோக்கங்களை அடைய தொழில்துறைக்கும், அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை உறுதி செய்ய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, சர்வதேச அளவில் ஈடுபடுவது மற்றும் போட்டித்தன்மையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார். உள்நாட்டு உற்பத்தியாளர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு கோயல், தரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்தினார். உயர்தர தயாரிப்புகள் அனைவருக்கும் பயனளிக்கும் என்பதால் நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் நலன்களை மேம்படுத்த தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் மற்றும் தயாரிப்புகளைத் தேர்வு செய்ய நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார், இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது என்று அவர் கூறினார்.
வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும், வளர்ந்த நாட்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பெருமையுடன் பங்கேற்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த சவாலை கூட்டாக ஏற்றுக்கொண்டு இந்த யாத்திரையின் தூதர்களாக மாற நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் என்பது நமது மனதில் இருந்து காலனிய மனப்பான்மை அகற்றப்பட்டு ஊழல் இல்லாததாக இருக்கும் என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்