மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வதுகூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் டிசம்பர் 10, 2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கிழக்கு மண்டல கவுன்சில் என்பது பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகம், பீகார் அரசுடன் இணைந்து இந்த கூட்டத்தை நடுத்துகிறது. கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டத்தில் உறுப்பு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 இன் பிரிவு 15-22 இன் கீழ் 1957-ஆம் ஆண்டில் ஐந்து மண்டல கவுன்சில்கள் நிறுவப்பட்டன. இந்த ஐந்து மண்டல கவுன்சில்களின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் உள்ளார். அதே நேரத்தில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அந்தந்த மண்டல கவுன்சிலைச் சேர்ந்த யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி / துணை நிலை ஆளுநர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மேலும் இரண்டு அமைச்சர்கள் மேலவை உறுப்பினர்களாக ஆளுநரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மண்டல கவுன்சிலும் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் ஒரு நிலைக்குழுவையும் அமைத்துள்ளன. கிழக்கு மண்டல கவுன்சிலின் 26-வது கூட்டத்தின் துணைத் தலைவராக பீகார் முதல்வர் உள்ளார்.
மாநிலங்கள் முன்மொழியும் பிரச்சினைகள், முதலில் சம்பந்தப்பட்ட மண்டல கவுன்சிலின் நிலைக்குழுவின் முன் விவாதத்திற்கு முன்வைக்கப்படுகின்றன. பரஸ்பர ஒப்புதலால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மண்டல கவுன்சில் கூட்டத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்படுகின்றன.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைய கூட்டுறவு மற்றும் போட்டி நிறைந்த கூட்டாட்சி முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வலுவான மாநிலங்கள் ஒரு வலிமையான தேசத்தை உருவாக்குகின்றன மற்றும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மத்திய மற்றும் மாநிலங்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து வழக்கமான உரையாடல் மற்றும் விவாதத்திற்கு ஒரு தளத்தையும் முறையான பொறிமுறையையும் வழங்குகின்றன என்று மண்டல கவுன்சில்கள் நம்புகின்றன. கடந்த 9 ஆண்டுகளில், 2014 முதல், பல்வேறு மண்டல கவுன்சில்களின் 29 நிலைக்குழு கூட்டங்கள் மற்றும் 26 மண்டல கவுன்சில் கூட்டங்கள் உட்பட மொத்தம் 55 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
எம்.பிரபாகரன்