இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்து தமிழகத்தை சேர்ந்த நாகை மீனவர்கள் 25 பேரை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படையின் செயல் கண்டிக்கதக்கது.
நாகப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் 25 மீனவர்கள் பருத்தித்துறை அருகே கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் விசைப் படகுகளில் மோதியதால் படகு சேதம் மிகவும் அடைந்தது. அதோடு மட்டுமல்லாமல் அப்படகுகளில் இருந்த மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்வதாக தகவல்கள் வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் 100- க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, பின்னர் விடுவித்து இருக்கிறது.
இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மிகுந்த அச்சத்துடனும், தொழில் செய்ய முடியாத விரக்தியிலும் இருக்கின்றார்கள். மீன்பிடித் தொழிலை பரம்பரை பம்பரையாக செய்து வரும் இவர்களால் வேறு தொழிலுக்கும் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி, இலங்கை அரசுடன் பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். தமிழக மீனவர்கள் அச்சமில்லாமல் மீன்படிக்க கடலுக்குள் செல்ல வழி வகுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா