தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கும், உள்ளூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் மாநில நிர்வாகம் தனது உதவியை நாடியதைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை ஆறு பேரிடர் நிவாரணக் குழுக்களை மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது. தூத்துக்குடியின் கடலோரப் பகுதிகளில் நிலைமையைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் கூடிய இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களையொட்டி தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17,18 தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்ததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தற்போது தூத்துக்குடியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்திய கடலோரக் காவல்படையின் மாவட்ட தலைமையகம் எண் 16 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பைப் பராமரித்து வருகிறது. தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்ட பின்னர், சென்னையில் இருந்து முக்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அழைத்து வருவது உட்பட வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மதுரையில் ஒரு நிலையான டோர்னியர் விமானம் மற்றும் ஏஎல்எச் ஹெலிகாப்டரை நிலைநிறுத்துவதன் மூலம் இந்திய கடலோரக் காவல்படை தனது ஈடுபாட்டை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மீட்புப் பணிகளில் உதவுவதற்காக துடுப்புப் படகுகள், கயாக் வகை படகுகளுடன் மீட்புக் குழுவும், மண்டபம் கடலோரக் காவல்படை நிலையத்தில் இருந்து ஒரு பேரிடர் மீட்புக் குழுவும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எஸ்.சதிஸ் சர்மா