2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் மின் நுகர்வு இரட்டிப்பாகும் என்பதால், நிலக்கரி உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய நிலக்கரி , சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹத் ஜோஷி கூறியுள்ளார். நிலக்கரி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் தலைமையில் நேற்று (21.12.2023) புதுதில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், நிலக்கரி அமைச்சகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி இந்த ஆண்டு ஒரு பில்லியன் டன்னைத் தாண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார். 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, முற்றிலும் வெளிப்படையான, இணையதள மூலமான வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்தின் கீழ், இதுவரை 91 சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 9-வது முறையாக வர்த்தக ஏலம் 2023 டிசம்பர் 20 அன்று தொடங்கப்பட்டுள்ளது என்று திரு பிரல்ஹத் ஜோஷி கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா