நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனம், தமது ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.2.30 கோடி உட்பட ரூ.4.30 கோடியை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதி வழங்கப்பட்டது.
ரூ.4.30 கோடிக்கான காசோலையை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு. பிரசன்ன குமார் மொட்டுபள்ளி இன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர். ஷிவ் தாஸ் மீனா முன்னிலையில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வழங்கினார்.
என்.எல்.சி., இந்தியா நிறுவனம், டிச., 5 முதல், 15-ம் தேதி வரை, 18 ராட்சத, 25 எச்.பி., திறன் கொண்ட நீர் வெளியேற்றும் பம்புகளைக் கொண்டு , பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து, முக்கிய இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை அகற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து, 51 லட்சத்து, 20 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியது.
தற்போது, என்.எல்.சி., இந்தியா நிறுவனம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில், 25 எச்.பி., திறன் கொண்ட 12 பம்புகளைக் கொண்டு வெள்ளத்தை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் உள்ள, என்.எல்.சி.ஐ.எல்., கூட்டு மின் நிலையத்தின், ஆர்.ஓ., ஆலையில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக, குடிநீர் வினியோகமும் செய்யப்படுகிறது.
எம்.பிரபாகரன்