மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 பள்ளி மாணவர்கள் அடங்கிய குழுவை இன்று சந்தித்தார்
இந்த மாணவர்கள் மத்திய அரசின் இளைஞர் பரிமாற்றத் திட்டம் 2023′ -ன் கீழ் ஜெய்ப்பூர், அஜ்மீர், புதுதில்லிக்குச் செல்கின்றனர். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வில், நாட்டின் கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு தெரிவிப்பதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அப்போது பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் மாணவர்கள் 2047-ம் ஆண்டின் சிற்பிகளாக இருப்பார்கள் என்றும், இது நாட்டிற்கான சிறந்த தருணம் என்றும், ஜம்மு -காஷ்மீருக்கு ஒரு புதிய தொடக்கம் என்றும் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீரின் அழகிய பிராந்தியம் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார் . கல்வீச்சு சம்பவங்கள் கடந்த கால நிகழ்வுகள். இன்று, ஜம்மு காஷ்மீர் விளையாட்டு சாதனைகளின் கதைகளுக்காக தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம் பெறுகிறது, என்று அவர் கூறினார்.
அப்துல் சமத், உம்ரான் மாலிக், பர்வேஷ் ரசூல், மன்சூர் பாண்டவ் போன்ற ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடந்த மாஸ்கோ சாம்பியன்ஷிப் போட்டியில் வுஷு வீரர்கள் சூர்யா பானு பர்தாப் சிங், அபிஷேக் ஜம்வால் ஆகியோர் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். 2022 -ம் ஆண்டில், பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ஆரிஃப் கான் என்ற காஷ்மீர் ஸ்கையர் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார், “காஷ்மீரில் உள்ள பெண்களும் சிறுவர்களுக்கு இணையாக விளையாட்டில் பங்கேற்கின்றனர். கிஷ்த்வாரில் உள்ள லோய்தர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான ஷீத்தல் தேவி, ‘சர்வதேச அளவில் போட்டியிடும் முதல் பெண் வில்வித்தை வீராங்கனை’ என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பல்வேறு பிரிவுகளில் ஒன்றல்ல, ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
திவாஹர்