இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களே, மனதின் குரலைக் கேட்கும் பலர், கடிதங்கள் வாயிலாக தங்களுடைய மறக்கமுடியாத கணங்களை என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள். 140 கோடி பாரத நாட்டவர்களின் சக்தி என்னவென்றால், இந்த ஆண்டு, நமது தேசமானது பல விசேஷமான சாதனைகளைப் படைத்திருக்கிறது. இந்த ஆண்டு தான் நாரீ சக்தி வந்தன் அதிநியம், அதாவது பெண்சக்தியைப் போற்றும் சட்டம் பல ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. பாரதநாடு 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகியிருப்பதில் தங்களுடைய மகிழ்ச்சியை பலர் கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியை பலர் எனக்கு நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நண்பர்களே, இன்று பாரதத்தின் அனைத்து இடங்களிலும் தன்னம்பிக்கை நிரம்பியிருக்கிறது, வளர்ச்சியடைந்த பாரதம் உணர்வு, சுயசார்பு என்ற உணர்வு எங்கும் நிறைந்திருக்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரச் சொற்களின் மகத்துவத்தை தீபாவளியின் போது சாதனை படைக்கும் வர்த்தகம் மூலமாக மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

நண்பர்களே, இன்றும் கூட சந்திரயான் – 3இன் வெற்றி தொடர்பாக பலர் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். என்னைப் போலவே, நீங்களும் கூட, நம்முடைய விஞ்ஞானிகள், குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் தொடர்பாக பெருமிதம் கொள்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நண்பர்களே, நாட்டூ நாட்டூ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த போது தேசம் முழுவதும் சந்தோஷத்தில் திளைத்தது. ‘The Elephant Whisperers’ படத்திற்கு விருது கிடைத்த வேளையில் யார் தான் உவகை பூத்திருக்க மாட்டார்கள்? இவற்றின் வாயிலாக உலகம் பாரதத்தின் படைப்பாற்றலைக் கண்டது, சுற்றுச்சூழலோடு நமக்கிருக்கும் லயிப்பைப் புரிந்து கொண்டது. இந்த ஆண்டு, விளையாட்டுக்களிலும் கூட, நமது தடகள வீரர்கள், வலுவான முறையிலே தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் வென்றார்கள். கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாரத விளையாட்டு வீரர்கள் நன்கு விளையாடி அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டார்கள். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி 20 உலகக் கோப்பையில் நமது பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றி மிகவும் உத்வேகமளிக்க வல்லது. பல விளையாட்டுக்களில் விளையாட்டு வீரர்களின் சாதனைகள் வாயிலாக தேசத்திற்கு பெருமை உண்டானது. இப்போது 2024ஆம் ஆண்டு, பாரீஸ் நகரில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறும், இதற்காக நாடனைத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

நண்பர்களே, நாமனைவரும் இணைந்து முயன்ற போது, நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப் பெரிய ஆக்கப்பூர்வமான தாக்கம் உண்டானது. சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும், என் மண் என் தேசம் போன்ற வெற்றிகரமான இயக்கங்களையும் கண்டிருக்கிறோம். இதில் கோடானுகோடி மக்களின் பங்கெடுப்பு மட்டுமே நம்மனைவருக்கும் சான்று பகர்கிறது. 70,000 அமுத நீர்நிலைகளை நிறுவியது என்பது நமது சமூகரீதியான சாதனை.

நண்பர்களே, எந்த ஒரு தேசம் புதுமைகள் படைத்தலுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கவில்லையோ, அதன் வளர்ச்சி தடைப்படும் என்பது என்னுடைய நம்பிக்கை. புதுமைகள் படைத்தலின் மையமாக பாரதம் ஆகியிருப்பது, நாம் தடைப்படப் போவது இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. 2015ஆம் ஆண்டிலே Global Innovation Index – உலக புதுமைகள் படைத்தல் குறியீட்டில் நாம் தரவரிசையில் 81ஆவதாக இருந்தோம். ஆனால் இன்றோ நமது தரவரிசை 40ஐ எட்டியிருக்கிறது. இந்த ஆண்டு பாரதம் விண்ணப்பித்திருக்கும் காப்புரிமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, இதிலே சுமார் 60 சதவீதம் உள்நாட்டு நிதியைச் சார்ந்திருந்திருக்கின்றன. QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்த முறை அதிக எண்ணிக்கையில் பாரதநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருந்தன. இப்படிப்பட்ட சாதனைகளை நான் பட்டியலிடத் தொடங்கினால், இதை என்னால் முழுவதுமாக முடிக்க முடியாது. பாரதநாட்டின் திறமைகள் எத்தனை வல்லமையோடு இருக்கின்றன என்பதற்கு இது ஒரு காட்சி மட்டுமே. தேசத்தின் இந்த வெற்றிகளால், நாட்டுமக்களின் இந்தச் சாதனைகளால், உத்வேகம் பெற வேண்டும், பெருமிதம் கொள்ள வேண்டும், புதிய உறுதிகளை மேற்கொண்டாக வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய குடும்பச் சொந்தங்களே, பாரதம் பற்றி எல்லாத் திசைகளிலும் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை, உற்சாகம் பற்றிப் பேசினோம், இந்த நம்பிக்கையும், உற்சாகமும் மிகவும் நல்லது தான். பாரதம் முன்னேறும் போது, இதனால் அதிக ஆதாயம் அடைவது இளைஞர்கள் தாம். ஆனால் இளைஞர்கள் அதிக உடலுறுதியோடு இருக்கும் போது தான், அவர்களால் இந்த அதிக ஆதாயத்தை அனுபவிக்க முடியும். இப்போதெல்லாம் வாழ்க்கைமுறை தொடர்பான நோய்கள் பற்றி நிறைய பேசப்படுகிறது, இது நம்மனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக கவலை அளிக்கும் விஷயமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த மனதின் குரலுக்கு ஃபிட் இண்டியா தொடர்பான உள்ளீடுகளை அனுப்பி வைக்குமாறு நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நீங்கள் எல்லோரும் அளித்த பதில்கள் எனக்கு உற்சாகத்தை அளித்தன. நமோ செயலியில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப்புகளும் கூட எனக்கு ஆலோசனைகளை அனுப்பியிருந்தார்கள், அவர்கள் தங்களுடைய பலவகையான வித்தியாசமான முயற்சிகளைப் பற்றித் தெரிவித்திருந்தார்கள்.

நண்பர்களே, பாரதம் மேற்கொண்ட முயற்சி காரணமாக, 2023ஆம் ஆண்டு, சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக இந்தத் துறையில் பணியாற்றும் ஸ்டார்ட் அப்புகளுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் வாய்த்தன, இவற்றில் லக்னவில் தொடங்கப்பட்ட கீரோஸ் ஃபுட்ஸ், பிரயாக்ராஜில் தொடங்கப்பட்ட கிராண்ட்மா மில்லட்ஸ் மற்றும் ந்யூட்ராசியூட்டிகல் ரிச் ஆர்கானிக் இண்டியா போன்ற பல ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன. ஆல்பினோ ஹெல்த் ஃபுட்ஸ், ஆர்போரியல் மற்றும் கீரோஸ் ஃபுட்ஸ் ஆகியவற்றோடு இணைந்த இளைஞர்கள், ஆரோக்கியமான உணவு தொடர்பான தேர்வுகள் குறித்து புதியபுதிய நூதனமான கண்டுபிடிப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். பெங்களூரூவின் அன்பாக்ஸ் ஹெல்த்தோடு தொடர்புடைய இளைஞர்கள், எப்படி மக்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்வதில் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பதைத் தெரிவித்தார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஈடுபாடு எப்படி வளர்ந்து வருவதைப் போலவே, இந்தத் துறையோடு இணைந்த பயிற்றுநர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஜோகோ டெக்னாலஜீஸ் போன்ற ஸ்டார்ட் அப்புகள், இந்தத் தேவையை நிறைவு செய்வதில் உதவிகரமாக இருக்கிறார்கள்.

      நண்பர்களே, இன்று உடல் ஆரோக்கியம் மற்றும் நலன் பற்றிய பேச்சுக்கள் நிறைய நடக்கின்றன, ஆனால் இதோடு தொடர்புடைய ஒரு பெரிய பக்கம் என்பது மனநலம்.  மும்பையைச் சேர்ந்த இன்ஃபீ-ஹீல் மற்றும் யுவர் தோஸ்த் போன்ற ஸ்டார்ட் அப்புகள், மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றி வருவதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.  இது மட்டுமல்ல, இன்று இதன் பொருட்டு, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  நண்பர்களே, நான் இங்கே சில ஸ்டார்ட் அப்புகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன், ஏனென்றால், பட்டியல் மிகவும் நீளமானது.  ஃபிட் இண்டியா என்ற கனவை மெய்ப்படச் செய்யும் திசையில், புதுப்புது உடல்நல ஸ்டார்ட் அப்புகள் பற்றி எனக்குக் கண்டிப்பாக எழுதி வாருங்கள் என்று நான் உங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.  உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து தகவல் அளிக்கும், புகழ்மிக்க நபர்களின் அனுபவங்களை உங்களோடு பகிர விரும்புகிறேன்.



      முதல் செய்தி, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடையது.  இவர் உடலுறுதி, குறிப்பாக மனவுறுதி, அதாவது மனநலன் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார்.

Audio*

இந்த மனதின் குரலில் மனநலம் பற்றிப் பேசுவதை என் பேறாகக் கருதுகிறேன். மனநோய்களும், நமது நரம்பியல் அமைப்பை நாம் பராமரிப்பது என்பதும் நேரடியாகத் தொடர்புடையன. நமது நரம்பியல் அமைப்பை நாம் எத்தனை நிலையாகவும், தொந்திரவு இல்லாமலும் வைத்திருக்கிறோம் என்பது, நமக்குள் நாம் எத்தனை இனிமையாக உணர்கிறோம் என்பதைத் தீர்மானம் செய்யும். அமைதி, அன்பு, ஆனந்தம், துயரம், மனவழுத்தம், அளப்பரிய மகிழ்ச்சி என்று நாம் அழைப்பவற்றிற்கு எல்லாம், ஒரு வேதியியல் மற்றும் நரம்பியல் ஆதாரம் உள்ளது. மருந்தியல் என்பது வெளியிலிருந்து வேதிப் பொருட்களைச் செலுத்தி, உடலின் வேதியியல் சீரற்ற நிலையைச் சரி செய்வது என்பது தான். மனநோய்கள் இந்த வகையில் தாம் கையாளப்படுகின்றன; ஆனால் வெளியிலிருந்து வேதிப் பொருட்களை மருந்துகளாக எடுப்பது என்பது மிகவும் தீவிரமான நிலைகளில் ஒருவர் இருக்கும் வேளையில் தான் என்பதை நாம் உணர வேண்டும்.

உள்ளக மனநலச் சூழலாகட்டும், நமக்குள்ளேயான சீரான வேதியியல் ஆகட்டும், அமைதி, சந்தோஷம், ஆனந்தம் என்பன ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையிலும், ஒரு சமூகத்தின் கலாச்சார வாழ்விலும், உலக நாடுகள் எங்கிலும், ஒட்டுமொத்த மனித சமூகத்திலும் கொண்டு வரப்பட வேண்டிய ஒன்று. நமது மனநலனை நாம் புரிந்து கொள்வது முக்கியமானது, மனதின் சீர்நிலை என்பது மென்மையான சிறப்புரிமை. இதனை நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். இதன் பொருட்டு யோக முறையில் பல மட்டங்களில் பயிற்சிகள் இருக்கின்றன. இந்தச் செயல்பாட்டின் எளிமையான பயிற்சிகளை மக்கள் மேற்கொள்ளும் போது, அவர்களின் நரம்பியல் அமைப்பில் ஒருவகை சீர்நிலையும், உறுதியான நிதானமும் ஏற்படுத்த முடியும். உள்மன நலனின் தொழில்நுட்பங்களையே நாம் யோகிக் அறிவியல் என்று அழைக்கிறோம். இவற்றை நாம் செயல்படுத்துவோம்.

மிக எளிய முறையில் சத்குரு அவர்கள், இப்படிப்பட்ட சிறப்பான வழிமுறைகளைத் தன்னுடைய உரையிலே முன்வைப்பதில் சமர்த்தராக அறியப்படுபவர்.

வாருங்கள், இப்போது நாம் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்மன்ப்ரீத் கௌர் அவர்கள் கூறுவதைக் கேட்கலாம்.

Audio*

வணக்கம். நாட்டுமக்களுக்கு மனதின் குரல் வாயிலாக நான் சில விஷயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். மதிப்பிற்குரிய பிரதம மந்திரி நரேந்திர மோதி அவர்களின் ஃபிட் இண்டியா முன்னெடுப்பு தான் என்னுடைய உடலுறுதி மந்திரத்தை உங்களோடு பகிர எனக்கு ஊக்கமளித்தது. அனைவருக்கும் என்னுடைய முதல் ஆலோசனை என்னவென்றால், மோசமான உணவுப்பழக்கம் இருந்தால், அதைத் தாண்டி எந்த ஒரு பயிற்சியும் பயனளிக்காது. அதாவது, நீங்கள் எப்போது உண்கிறீர்கள், என்ன உண்கிறீர்கள் என்பவை பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்மையில் தான் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி மோதி அவர்கள், அனைவரையும் சிறுதானியமான கம்பை உண்ண ஊக்கமளித்தார். இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, நீடித்த விவசாயத்தைச் செய்ய உதவிகரமாக இருக்கிறது, செரிப்பதிலும் எளிதாக இருக்கிறது. சீரான உடற்பயிற்சியும், 7 மணிநேரம் உறக்கமும் உடலுக்கு மிகவும் அவசியமானது, உடலுறுதியோடு இருக்க இது உதவிகரமாக இருக்கிறது.

இதற்காக மிகவும் ஒழுங்கும், சீரான செயல்பாடும் அவசியமாகும். இதன் பலன் உங்களுக்குக் கிடைக்கத் தொடங்கிய பிறகு, தினசரி நீங்களே உடல்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் அனைவரோடும் உரையாடவும், என்னுடைய உடலுறுதிக்கான உத்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நான் மதிப்பிற்குரிய பிரதம மந்திரிக்கு பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

ஹர்மன்ப்ரீத் அவர்களைப் போன்ற புகழ்மிக்க விளையாட்டு வீரர்களின் சொற்கள் கண்டிப்பாக, உங்களனைவருக்கும் உத்வேகமளிக்கும்.

        வாருங்கள், கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் கூறுவதைக் கேட்கலாம்.  சதுரங்கம் என்ற விளையாட்டிற்கு உறுதியான மனநலம் என்பது எத்தனை அவசியமானது என்பதை நாமனைவருமே அறிவோம் இல்லையா?

Audio*

வணக்கம், நான் விஸ்வநாதன் ஆனந்த், நான் சதுரங்கம் விளையாடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், உடலுறுதிக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்று பல வேளைகளில் என்னிடம் கேட்கப்படுவதுண்டு. சதுரங்கம் விளையாட ஏராளமாக ஒருமுகமான கவனமும், பொறுமையும் தேவை. இதற்காக என்னை உளவுறுதியோடும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள நான் மேற்கொள்பவற்றைப் பகிர்கிறேன். வாரம் இருமுறை நான் யோகம் பயில்கிறேன், இருதயப் பயிற்சிகளை வாரம் இருமுறை பயில்கிறேன், உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை, ஸ்ட்ரெட்சிங், பளுதூக்கல் பயிற்சி ஆகியவற்றைச் செய்ய வாரம் ஒரு நாளை ஒதுக்குகிறேன். இவை அனைத்தும் சதுரங்கம் விளையாட மிக முக்கியமானவை.

6 முதல் 7 மணிநேரம் தாக்குப்பிடிக்கத் தேவையான தீவிரமான மூளைச் செயல்பாட்டிற்கு போதுமான சக்தி தேவை, அதே நேரம் சௌகரியமாக அமர்ந்திருக்க, வளைந்து கொடுக்கும் தன்மை தேவை, ஒரு சிக்கலில், பொதுவாக அது ஒரு சதுரங்க விளையாட்டாக இருக்கும், அந்தக் கட்டத்தில் மனதை ஒருநிலைப்படுத்த சுவாஸத்தை ஒழுங்குபடுத்தல் உதவிகரமாக இருக்கும். மனதின் குரலின் அனைத்து நேயர்களுக்கும் நான் அளிக்க விரும்பும் உள்ள மற்றும் உடலுறுதிக்கான ரகசியம் என்னவென்றால், மேற்கொள்ளவிருக்கும் பணியின் மீது மனதைச் செலுத்தி, அமைதியாக இருப்பது மட்டுமே. மேலும் ஒரு முக்கியமான உத்தி, இரவில் நல்ல உறக்கத்தில் ஆழ்வது. ஓரிரவில் 4 அல்லது 5 மணிநேரம் மட்டுமே உறங்காதீர்கள். 7 அல்லது 8 மணிநேரமாவது உறங்குவது என்பது மிகவும் குறைந்தபட்சத் தேவை; ஆகையால் நல்ல இரவு உறக்கம் அவ்சியம். அப்போது தான் அடுத்த நாள் காலையில் நீங்கள் அமைதியோடும் நிதானத்தோடும் செயல்பட முடியும். உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுக்குள் இருக்கும் வேளையில், உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளை நீங்கள் எடுக்க மாட்டீர்கள். என்னைப் பொறுத்த மட்டில் உள்ளமும், உடலும் உறுதியாக இருக்க, உறக்கம் என்பது மிக முக்கியமான உத்தி.

வாருங்கள், இப்போது அக்ஷய் குமார் அவர்கள் கூறுவதைக் கேட்கலாம்.

Audio*

வணக்கம், நான் அக்ஷய குமார், மனதின் குரல் என்னுடைய மனதின் குரலை வெளிப்படுத்த எனக்கு சிறியதொரு வாய்ப்பை அளித்தமைக்கு மதிப்பிற்குரிய பிரதமருக்கு நான் என் பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நான் உடலுறுதி தொடர்பாகவும், இயற்கையான வகையிலே உடலுறுதியாகவும் இருப்பதில் எத்தனை பேரார்வம் கொண்டவன் என்பது உங்களனைவருக்கும் நன்றாகத் தெரியும். பகட்டான உடல்பயிற்சி மையங்களை விட அதிகம் நீச்சலடிப்பது, பேட்மிண்டன் விளையாடுவது, படிகளில் ஏறுவது, கரலாக்கட்டை சுற்றுவது, ஆரோக்கியமான உணவை உண்பது போன்றவற்றையே நான் விரும்புகிறேன்; சுத்தமான நெய்யை சரியான அளவு எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால் பல இளைஞர்கள், குண்டாகி விடுவோம் என்ற காரணத்தால் நெய்யைப் பயன்படுத்தாமல் இருப்பதை என்னால் காண முடிகிறது. நமது உடலுறுதிக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, ஏதோ ஒரு திரையுலக நட்சத்திரத்தின் உடலைப் பார்த்து அல்ல. திரையில் தெரியும் நட்சத்திரங்கள், நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. பலவகையான ஃபில்டர்கள், ஸ்பெஷல் இஃபெக்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றைப் பார்த்து, நாமும் நமது உடலை மாற்றியமைக்கத் தவறான வழிமுறைகள், குறுக்குவழிகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றோம். இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொண்டு, சிக்ஸ் பேக்குகள்-எய்ட் பேக்குகள் என்றெல்லாம் உடலை ஆக்கிக் கொள்கிறார்கள். நண்பர்களே, இப்படிப்பட்ட குறுக்குவழிகளால் உடல் மேலோட்டமாக கவர்ச்சிகரமாக இருந்தாலும், உள்ளுக்குள்ளே உளுத்துப் போகிறது. குறுக்குவழிகள் உங்கள் வாழ்க்கையைக் குறுக்கி விடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவை குறுக்குவழி அல்ல, நீண்டகால உடலுறுதி. நண்பர்களே, உடலுறுதி என்பது ஒருவகை தவம். அது உடனடி காப்பி அல்லது 2 நிமிட நூடுல்கள் போன்றது இல்லை. இந்தப் புத்தாண்டில், எந்த வேதிப் பொருட்களையும் பயன்படுத்த மாட்டேன், எந்தக் குறுக்குவழி உடல்பயிற்சியையும் மேற்கொள்ள மாட்டேன் என்று உங்களுக்கு நீங்களே உறுதியெடுத்துக் கொள்ளுங்கள், யோகாஸனம் பயிலுங்கள், நன்கு உண்ணுங்கள், நேரத்திற்கு உறங்குங்கள், கொஞ்சம் தியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், மிகவும் முக்கியமாக, நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்களோ, அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றைக்குப் பிறகு, ஃபில்டர் சார்ந்த வாழ்க்கை அல்ல, ஃபிட்டான வாழ்க்கையை வாழுங்கள். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். ஜய் மஹாகால்.

        இந்தத் துறையில் பல ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன என்பதால், இந்தத் துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் இளைஞரான ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனரையும் உரையாடலில் இணைத்துக் கொள்ளலாம் என்று கருதினேன்.

Audio*

வணக்கம், நான் ரிஷப் மல்ஹோத்ரா, நான் பெங்களூரூவில் வசிக்கிறேன். மனதின் குரலில் உடலுறுதி தொடர்பான உரையாடல் நடைபெறுகிறது என்பதை அறிந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானே கூட உடலுறுதி உலகினைச் சேர்ந்தவன் தான், பெங்களூரூவில் எங்களுடைய ஒரு ஸ்டார்ட் அப் இருக்கிறது, இதன் பெயர் தகடா ரஹோ. பாரத நாட்டின் பாரம்பரியமான உடல்பயிற்சி முறைகளை வெளிக்கொணர வேண்டியே எங்களுடைய ஸ்டார்ட் அப் உருவக்கப்பட்டிருக்கிறது. பாரதநாட்டின் பாரம்பரியமான உடல்பயிற்சி முறையில் ஒரு அற்புதமான உடல்பயிற்சி இருக்கிறது, இதை கதா வியாயாம் என்பார்கள், எங்களுடைய மொத்த கவனமும் கதா மற்றும் முக்தர் உடற்பயிற்சியிலேயே இருக்கிறது. எப்படி கதாவிலிருந்து அனைத்துப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறீர்கள் என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கதா வியாயாம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒன்று, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதநாட்டில் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் இதை சிறிய-பெரிய மல்யுத்தப் பயிற்சி மையங்களில் பார்த்திருக்கலாம், எங்களுடைய ஸ்டார்ட் அப் வாயிலாக, நாங்கள் இதற்கு ஒரு நவீன வடிவம் அளித்து மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நாடெங்கிலும் எங்களுக்கு மிகுந்த ஆதரவும் அன்பும் கிடைத்திருக்கிறது. இதைத் தவிர, பாரத நாட்டில் பண்டைய உடற்பயிற்சிகள் பல இருக்கின்றன, உடல்நலம், உடலுறுதி தொடர்பான விதிமுறைகள் இருக்கின்றன, இவற்றை நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும், உலகின் முன்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று மனதின் குரல் வாயிலாக நான் தெரிவிக்க விரும்புகிறேன். நான் உடலுறுதி உலகைச் சார்ந்தவன் என்பதால், உங்களுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு ரகசியத்தைக் கூறுகிறேன். கதா வியாயாம் வாயிலாக நீங்கள் உங்களுடைய பலம், உங்களுடைய சக்தி, உங்களுடைய தோற்ற அமைவு, உங்களுடைய சுவாஸம் ஆகியவற்றைக் கூட சரி செய்து கொள்ள முடியும் என்பதால், கதா வியாயாமை கைக்கொள்ளுங்கள், முன்னேறுங்கள். ஜய் ஹிந்த்.

    நண்பர்களே, அனைவரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள் ஆனால், அனைவரின் மந்திரமும் ஒன்று தான் – ஆரோக்கியமாக இருங்கள், உடலுறுதியோடு இருங்கள் என்பது தான்.  2024ஆம் ஆண்டைத் துவக்க, உங்களுடைய உடலுறுதியை மேற்கொள்வதைக் காட்டிலும் சிறப்பான உறுதிப்பாடு வேறு என்னவாக இருக்க முடியும்.

என் குடும்ப உறவுகளே, சில நாட்களுக்கு முன்பாக, காசியிலே ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை மனதின் குரலின் நேயர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டிலிருந்து காசி வந்தார்கள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அங்கே அவர்களோடு உரையாட நான் செயற்கை நுண்ணறிவுக் கருவியான பாஷிணியை பொதுமேடையில் முதன்முறையாகப் பயன்படுதினேன். மேடையிலே நான் ஹிந்தியிலே உரையாடினேன் ஆனால், இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியான பாஷிணி காரணமாக, அங்கே இருந்த தமிழர்களால் என்னுடைய உரை, உடனடியாக தமிழில் கேட்க முடிந்தது. காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருந்த தமிழ்ச் சகோதரர்கள் இந்தப் பரீட்சார்த்த முயற்சியால் மிகவும் உற்சாகமடைந்தார்கள். ஒருவர் ஒரு மொழியில் உரையாற்ற, மக்கள் உடனடியாக அந்த உரையைத் தங்களுடைய மொழியில் கேட்கக் கூடிய நாள் தொலைவில் இல்லை. இதே போன்று திரைப்படங்களின் விஷயத்திலும் நடக்கும், அப்போது திரையரங்கில் அமர்ந்திருக்கும் மக்கள், செயற்கை நுண்ணறிவின் துணையோடு உடனடியாக மொழியாக்கத்தைக் கேட்டு ரசிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் நமது பள்ளிகளில், நமது மருத்துவமனைகளில், நமது நீதிமன்றங்களில் பரவலான முறையில் பயன்படுத்தப்படும் போது, எத்தனை பெரிய மாற்றம் ஏற்படும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்!! உடனடி மொழிமாற்றத்தோடு தொடர்புடைய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் மேலும் ஆராய்ச்சி செய்யுங்கள், அவற்றை 100 சதவீதம் பிசிறு இல்லாதவையாக ஆக்குங்கள் என்று நான் இன்றைய இளைஞர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நண்பர்களே, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நமது மொழிகளை நாம் காப்பாற்றவும் வேண்டும், அவற்றை வளர்த்தெடுக்கவும் வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு பழங்குடியின கிராமம் பற்றி உங்களிடம் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கிராமத்தில் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கல்வியளிக்க ஒரு வித்தியாசமான முன்னெடுப்பு செய்யப்படுகிறது. கட்வா மாவட்டத்தின் மங்கலோ கிராமத்தின் பிள்ளைகளுக்கு குடுக் மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பெயர், கார்த்திக் உராவ் ஆதிவாசி குடுக் ஸ்கூல். இந்தப் பள்ளியில் 300 பழங்குடியினக் குழந்தைகள் படிக்கிறார்கள். குடுக் மொழி, உராவ் பழங்குடியினத்தவர்களின் தாய்மொழி. குடுக் மொழிக்கென எழுத்து வடிவம் உண்டு, இதை தோலங்சிகீ என்ற பெயரிட்டு அழைப்பார்கள். இந்த மொழி மெல்லமெல்ல மறையத் தொடங்கியது, இதைக் காப்பாற்ற, இந்தச் சமுதாயமானது தனது மொழியிலேயே குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டது. இந்தப் பள்ளியைத் துவக்கிய அரவிந்த உராவ், பழங்குடியினப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் ஒரு தடைக்கல்லாக விளங்கியதால், கிராமத்துக் குழந்தைகளுக்குத் தங்களுடைய தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கத் தொடங்கினார்கள் என்கிறார். அவர்களுடைய இந்த முயற்சி காரணமாக, மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கத் தொடங்கின, கிராமவாசிகளும் அவரோடு தங்களை மேலும் இணைத்துக் கொண்டார்கள். தங்கள் தாய்மொழியிலேயே படிப்பதன் காரணமாக பிள்ளைகளின் கல்வி வேகமாக வளர்ந்தது. நமது தேசத்தில் பல பிள்ளைகள், மொழித் தடைகள் காரணமாக, படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சிரமங்களைத் தொலைக்க, புதிய தேசியக் கல்விக் கொள்கையாலும் கூட உதவிகள் கிடைத்து வருகின்றது. நம்முடைய முயற்சி என்னவென்றால், மொழி என்பது எந்த ஒரு குழந்தையின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் ஒரு தடைக்கல்லாக மாறி விடக்கூடாது என்பது தான்.

நண்பர்களே, நம்முடைய பாரத பூமிக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசத்தின் பெருமைமிகு பெண்கள் பெருமிதம் சேர்த்து வந்திருக்கிறார்கள். சாவித்திரிபாய் ஃபுலே அவர்கள், ராணி வேலு நாச்சியார் அவர்கள் போன்றோர் இப்படிப்பட்ட இரண்டு ஆளுமைகள். அவர்களுடைய தனித்தன்மை ஒவ்வொரு யுகத்திலும் பெண்சக்தியை முன்னேற்றும் பாதையைத் தொடர்ந்து துலக்கும் விளக்குத் தூண்கள் போன்றவை. இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து, ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று நாமனைவரும் இந்த இருவரின் பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறோம். சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே கல்வி மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் அவருடைய பங்களிப்பு நம் கண் முன்பாக வருகிறது. பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கல்விக்காக இவர் எப்போதும் ஓங்கிக் குரல் கொடுத்து வந்திருக்கிறார். இவர் தன் காலத்தைத் தாண்டிய முற்போக்கு எண்ணத்தோடு பயணித்தவர், தவறான பழக்கங்களுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டவர். மஹாத்மா ஃபுலே அவர்களோடு இணைந்து இவர் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமான பல பள்ளிகளை நிறுவினார். இவருடைய கவிதைகள் மக்கள் மத்தியிலே விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், தன்னம்பிக்கையை நிரப்பவும் செய்தன. தேவையான வேளையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும், இயற்கையோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்று எப்போதுமே இவர் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கிறார். இவர் எத்தனை உதார குணம் வாய்ந்தவர் என்பதைச் சொற்களில் வடிக்க முடியாது. மஹாராஷ்டிரத்தில் பஞ்சம் ஏற்பட்ட வேளையில், சாவித்திரிபாயும், மஹாத்மா ஃபுலேவும் பட்டினியால் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் தங்கள் இல்லக் கதவுகளைத் திறந்து விட்டார்கள். சமூகநீதி தொடர்பான இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகளை மிகவும் அரிதாகவே காண முடியும். ப்ளேகு நோய் பற்றிய அச்சம் தீவிரமாகப் பரவியிருந்த போது அவர்கள் தாங்களே உவந்து மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இந்த வேளையில் இவர்களே கூட இந்த நோயால் பீடிக்கவும் பட்டார்கள். மனிதத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்த இவர்களுடைய வாழ்க்கை இன்றும் கூட பலருக்கு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கிறது.

நண்பர்களே, அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய, தேசத்தின் பல மகத்தான ஆளுமைகளில் இராணி வேலு நாச்சியாரும் ஒருவர். தமிழ்நாட்டின் என்னுடைய சகோதர சகோதரிகள் இன்றும் கூட வீரமங்கை வேலு நாச்சியாரின் பெயரை நெஞ்சில் பதித்துப் போற்றி வருகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இராணி வேலு நாச்சியார், எப்படி வீரத்துடன் போராடினார், தன்னுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார் என்பது பெரும் உத்வேகத்தை அளிக்க வல்லது. ஆங்கிலேயர்கள் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்த போது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய இவருடைய கணவர் கொலை செய்யப்பட்டார். இராணி வேலு நாச்சியாரும் அவருடைய மகளும் எப்படியோ எதிரிகளிடமிருந்து தப்பினார்கள். ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், மருது சகோதரர்கள் அதாவது தனது தளபதிகளோடு இணைந்து ஒரு படையை உருவாக்கி, பல ஆண்டுகள் வரை அதை வலுப்படுத்தினார். பிறகு முழுத் தயாரிப்போடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார், மிகவும் நெஞ்சுரத்தோடும் உறுதிப்பாட்டு சக்தியோடும் போரிட்டார். முதன்முறையாகத் படையில் பெண்களுக்கென்று ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தியோர் பட்டியலில் இராணி வேலு நாச்சியாரின் பெயர் தான் முன்னணி வகிக்கிறது. நான் இந்த இரண்டு வீராங்கனைகளுக்கும் என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

எனது குடும்ப உறவுகளே, குஜராத்தின் டாயராவில் ஒரு பாரம்பரியம் உண்டு. இரவு முழுக்க ஆயிரக்கணக்கான பேர் டாயராவில் பங்கெடுத்து, கேளிக்கையோடு கூடவே ஞானத்தைப் பெறுகிறார்கள். இந்த டாயராவிலே நாட்டுப்புற இசை, நாட்டுப்புற இலக்கியம் மற்றும் நகைச்சுவை என்ற முக்கூடல், அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்ளும். இந்த டாயராவில் ஒரு பிரசித்தமான கலைஞரின் பெயர் பாய் ஜகதீஷ் திரிவேதி அவர்கள். நகைச்சுவைக் கலைஞர் என்ற வகையில் பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறார். அண்மையில் தான் பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள் எழுதிய கடிதம் எனக்குக் கிடைத்தது, கூடவே அவர் தனது புத்தகத்தையும் எனக்கு அனுப்பி இருந்தார். புத்தகத்தின் பெயர் – Social Audit of Social Service, இது மிக வித்தியாசமான புத்தகம். இதிலே கணக்குவழக்கு இருக்கிறது, இந்தப் புத்தகம் ஒரு வகையான இருப்பு நிலைக் குறிப்பு. கடந்த 6 ஆண்டுகளில் பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள் எந்தெந்த நிகழ்ச்சிகளில் எத்தனை வருமானம் ஈட்டினார், எங்கெங்கே அதை செலவு செய்தார் என்பது பற்றிய கணக்குவழக்குப் புத்தகம் இது. இந்த இருப்பு நிலைக் குறிப்பு ஏன் வித்தியாசமானது என்றால், இவர் தனது வருமானம் முழுவதன் ஒவ்வொரு ரூபாயையும், பள்ளி, மருத்துவமனை, நூலகம், மாற்றுத்திறனாளிகளோடு தொடர்புடைய அமைப்புகள், சமூக சேவை ஆகியவற்றுக்குச் செலவு செய்திருக்கிறார், மொத்தமாக 6 ஆண்டுக்கால கணக்குவழக்கு. 2022ஆம் ஆண்டில் அவருக்கு அவருடைய நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த வருமானம் 2 கோடியே, 35 இலட்சத்து, 79 ஆயிரத்து, 674 ரூபாய் என்று புத்தகத்தில் ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாயைக் கூட அவர் தன்னிடத்திலே வைத்துக் கொள்ளவில்லை. உள்ளபடியே இதன் பின்புலத்திலும் ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. ஒரு முறை பாயி ஜகதீஷ் திரிவேதி அவர்கள், 2017இலே அவருக்கு 50 வயதாகும் போது, அதன் பிறகு அவருடைய நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வீட்டுக்குக் கொண்டு செல்லப் போவதில்லை, சமூகத்திற்காக செலவு செய்வேன் என்றும் கூறியிருந்தார். 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை, இவர் கிட்டத்தட்ட எட்டே முக்கால் கோடி ரூபாயை, பல்வேறு சமூகச் செயல்களுக்குச் செலவு செய்திருக்கிறார். ஒரு நகைச்சுவைக் கலைஞர், தன்னுடைய சொற்கள் வாயிலாக அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஆனால் உள்ளே எத்தனை மனிதத்தன்மையோடு வாழ்கிறார் என்பது பாயி ஜக்தீஷ் திரிவேதி அவர்களின் வாழ்விலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. இவரிடம் 3 முனைவர் பட்டங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இவர் இதுவரை 75 புத்தகங்களை எழுதியிருக்கிறார், இவற்றில் பலவற்றிற்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சமூக சேவைக்காகவும் கூட பல விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார். பாயி ஜக்தீஷ் திரிவேதி அவர்களின் சமூக சேவைகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் குடும்பச் சொந்தங்களே, அயோத்தி இராமர் கோயில் தொடர்பாக நாடெங்கிலும் பெரும் உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது. மக்கள் தங்களுடைய உணர்வுகளை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே, ஸ்ரீ இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக பல புதிய பாடல்கள், புதிய பஜனைப் பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்களே கவனித்திருக்கலாம். பலர் புதிய கவிதைகளையும் வடித்திருக்கிறார்கள். இவற்றில் பெரியபெரிய அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் உண்டு, புதிய, வளரும் இளைய நண்பர்களும் கூட, மனதைக் கொள்ளை கொள்ளக்கூடிய வகையில் பஜனைப் பாடல்களை இயற்றியிருக்கின்றார்கள். சில பாடல்களையும், பஜனைப் பாடல்களையும் நான் சமூக ஊடகத்தில் பகிர்ந்தும் இருக்கிறேன். கலையுலகம் தனது பிரத்யேகமான பாணியில் இந்த வரலாற்றுப்பூர்வமான தருணத்தில் பங்குதாரராக ஆகி வருகிறது என்பதே என் கருத்து. நாமனைவரும், அனைத்துப் படைப்புக்களையும் பொதுவான ஒரு ஹேஷ்டேகில் பகிரலாமே என்ற எண்ணம் என் மனதில் உதிக்கிறது. #shriRamBhajan ஹேஷ்டேக் ஸ்ரீ ராம் பஜன் என்பதோடு நீங்கள் உங்கள் படைப்புக்களை சமூக ஊடகத்தில் பகிருங்கள். இந்தத் தொகுப்பு, அனைவரையும் இராமமயமாக ஆக்கவல்ல, உணர்வுகளின், பக்தியின் பெருக்காக ஆகி விடும்.

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் என் தரப்பில் இம்மட்டே. 2024ஆம் ஆண்டு இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கவிருக்கிறது. பாரத தேசத்தின் சாதனைகள் அனைத்து பாரத நாட்டவர்களின் சாதனைகள். நாம் 5 உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு, பாரத நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து ஈடுபட்டு வர வேண்டும். எந்த ஒரு வேலையை நாம் செய்தாலும் கூட, எந்த ஒரு முடிவினை நாம் எடுத்தாலும் கூட, இதனால் என் தேசத்திற்கு என்ன கிடைக்கும், இதனால் என் தேசத்திற்கு என்ன சாதகம் ஏற்படும் என்பதே நமது முதன்மையான உரைகல்லாக இருக்க வேண்டும். Nation First – தேசத்திற்கே முதன்மை என்பதை விட மேலான மந்திரம் வேறொன்றுமில்லை. இந்த மந்திரத்தை அடியொற்றி நாட்டுமக்கள் நாமனைவரும், நம்முடைய தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம், தற்சார்புடையதாக மாற்றுவோம். நீங்கள் அனைவரும் 2024ஆம் ஆண்டிலே, வெற்றிகளின் புதிய சிகரங்களை எட்ட வேண்டும், நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உடலுறுதியோடு இருக்க வேண்டும், அளவற்ற ஆனந்தத்தோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. 2024ஆம் ஆண்டிலே, நாம் மீண்டும் ஒரு முறை நாட்டுமக்களின் புதிய சாதனைகள் தொடர்பாக உரையாடுவோம். பலப்பல நன்றிகள்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply