கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்.இ.சி நிறுவனம்) அடுத்த 5 ஆண்டுகளில், ஆர்.வி.என்.எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி வரை நிதியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் பன்னோக்கு போக்குவரத்துத் திட்டங்கள், ரயில் உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை, துறைமுகம் மற்றும் ஆர்.வி.என்.எல் தொடர்புடைய மெட்ரோ திட்டங்களை உள்ளடக்கியது.
கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தின் (ஆர்.இ.சி.) நிதிப்பிரிவு இயக்குநர் திரு அஜய் சவுத்ரி மற்றும் ஆர்.வி.என்.எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் திரு ராஜேஷ் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எரிசக்தி அமைச்சகத்தின் கீழ், 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்.இ.சி, உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், பேட்டரி சேமிப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மின்-உள்கட்டமைப்பு துறைக்கு நீண்டகாலக் கடன்கள் மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்குகிறது.
எஃகு மற்றும் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாக சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள், மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப தகவல்தொடர்பு, சமூக மற்றும் வணிக உள்கட்டமைப்புப் பணிகளை உள்ளடக்கிய மின்சாரம் அல்லாத உள்கட்டமைப்புத் துறையிலும் ஆர்.இ.சி பன்முகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல், இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு தேவைகளில் சுமார் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. பொதுத்துறை தனியார் கூட்டு செயல்பாட்டின் கீழ் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது. ஆர்.வி.என்.எல் முதன்மையாக ரயில்வே திட்டங்களை மேற்கொள்கிறது.
திவாஹர்