தமிழகத்தில் தமிழர்கள் அனைவரும் விரும்பி கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் பாரம்பரியமான பண்டிகை.
இப்பண்டிகையின் போது தமிழகத்தில் வருடம்தோறும் தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு அளிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிந்ததே. சென்ற ஆண்டு தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கமும், கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் உள்பட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு விவரங்களை முழுமையாக அறிவிக்கவில்லை அதோடு கடந்த ஆண்டு அளிக்கப்பட்டதை போல் ரொக்க பணம் எதுவும் அறிவிக்கவில்லை.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா வின் தாக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது பொருளாதார ரீதியில் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.2,500 அளித்தார்கள். அப்பொழுது எதிர்கட்சியாக இருந்த தி.மு.க. ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதை வலியுறுத்தியது.
தற்பொழுது தமிழக மக்கள் மழை வெள்ளத்தாலும், புயலாலும் பாதிக்கபட்டு பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாட, அன்று எதிர்கட்சியாக இருந்த தி.மு.க விடுத்த கோரிக்கை இன்று தாங்கள் ஆளும் தி.மு.க ஆட்சியில் ரூ.5,000 வழங்கி மக்கள் நலன் காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்